கொழும்பில் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான பணத்தை திருடிச் சென்ற சந்தேக நபர்கள் கைது

24 0

கொழும்பு,  புறக்கோட்டை  பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை  திட்மிட்டு திருடிச்சென்ற குறித்த நிறுவனத்தின் ஊழியர் உட்பட சந்தேகநபர்கள் 7 பேர் களனி குற்றத்தடுப்பு பணியக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் 2 கோடியே 67 இலட்சம் ரூபா பணமும் சோதனை நடவடிக்கையின் போது அதிகாரிகலால் மீட்கப்பட்டுள்ளது.

பேலியாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாராங்மினிய பகுதியில் புதன்கிழமை களனி குற்றத்தடுப்பு பணியகத்துக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து 2 சந்தேகநபர்களை கைது செய்திருந்தனர்.  இந்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை  தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதன்போது முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து பயணித்த பயணியிடமிருந்த பொதியொன்றிலிருந்து 30 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையின் நிமித்தம் பணத்தை வைத்திருந்த சந்தேகநபர், முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  சந்தேகநபர்கள் பயணம் செய்த முச்சக்கர வண்டியும் விசாரணை அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டது.

கைது  நடவடிக்கையை தொடர்ந்து சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, குறித்த பணம் கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது  என தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்,  அந்நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை வங்கியில்  வைப்பிடுவதற்காக கொண்டு சென்ற போது அடையாளம்  தெரியாத நபர்களால் அப்பணம் திருடிச் செல்லப்பட்டதாக நாடகமாடியுள்ளார்.

பின்னர் மேற்படி ஊழியரின் திட்டத்தின்படி சந்தேகபர்களிடம் அப்பணத்தை கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.   இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருந்த அதிகாரிகள்  திருடிச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான  மேலும் 15 இலட்சம் ரூபா பணத்துடன் பெண் ஒருவரையும், 2 கோடியே 22 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பணத்துடன் 5 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

குற்றச்செலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  25 தொடக்கம் 45 வயதுடைய களனி, பேலியகொடை, வெல்லம்பிட்டி மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நபர்களும்  கடவத்த பகுதியை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும்  இவ்வாறு கைதாகியுள்ளனர்.  சம்பவம்  தொடர்பில் களனி குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.