வடக்கு,கிழக்கில் போதைப்பொருள் பாவனை தீவிரம்: இராணுவத்துக்கு பெரும் பங்குண்டு

78 0

வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் விநியோகித்தில் இராணுவத்திற்கு மிகப்பெரிய பங்குள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சியை தோற்கடிப்பதற்காக இராணுவத்தினரால் வடக்கு,கிழக்கில் பரப்பப்பட்ட போதைப்பொருள் புற்றுநோய் இன்று தெற்கிலும் வியாபித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் இராணுவத்தினரை இது தொடர்பான நடவடிக்கையில் இருந்து முற்று முழுதாக நீக்கி விடுங்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்படட குற்றங்களை ஒழிப்பதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2001ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் நான் இந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தேன். அந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இடையே சமாதான முயற்சி இடம்பெற்றது. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது . ஆனால் 2006ஆம் ஆண்டில் அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அதிலிருந்து விலகி இனப் படுகொலையை நோக்கி போர் நடத்திச் செல்லப்பட்டது.

அந்தக் காலப்பகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் எனக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும், அவர்களின் நிர்வாகத்துடனும் பழகக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன. அந்தக் காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப் புலிகள் நிர்வாக கட்டுப்பாட்டு பகுதியில் போதைப் பொருள் பாவனை பூச்சியமாகவே இருந்தது. அந்தளவு தூரத்திற்கு அந்த நிர்வாகம் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற இலக்கில் இயங்கியமையினால் அவர்கள் போதைப் பொருளை ஒழிக்கும் நடவடிக்கையில் சாதித்தனர்.

இதேவேளை வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களிலும் போதைப் பொருள் பாவனை மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது. விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அங்கேயும் இருந்தமையினால் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு பயம் இருந்தது. அந்தளவு தூரத்திற்கு மக்கள் மீது விருப்பமும் பாசமும் கொண்ட நிர்வாகம் இருக்கும்போதுதான் இவ்வாறான மோசமான சமூகத்தில் புற்றுநோயாக கருதப்படும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.

ஆனால் இன்று வடக்கு மற்றும் கிழக்கில் போதைப் பொருளை பரப்புவதில் இராணுவத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. போர் முடிவடைந்த பின்னர் 2015ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, இராணுவம் போதைப் பொருளை முற்றுமுழுதாக ஒழிப்பதை விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

1995 ஆண்டில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் சென்ற பின்னரே போதைப் பொருள் பிரச்சினை அங்கே வளரத் தொடங்கியது. அதுவும் 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்குஇ கிழக்கு மாகாணம் போதைப் பொருளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போது போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சமூகத்தால் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களை துரத்திச் செல்லும் போது,அவர்கள் ஓடி ஒளியும் இடம் இராணுவ முகாம்களே ஆகும். பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடுகளை செய்தால் அவ்வாறான முறைப்பாடுகளை பதிவு செய்ய மறுக்கின்றனர். இதுவே உண்மை. மக்கள் மீது பற்றுக்கொண்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கம் இருந்தாலே இவ்வாறான மோசமான செயற்பாடுகளை தடுக்கலாம்.

முதல்கட்டமாக இராணுவத்தை பயன்படுத்தி போதைப் பொருளை பரப்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சியை தோற்கடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு புற்றுநோய் இப்போது தெற்கிற்கும் பரவியுள்ளது. தெற்கில் பரவியுள்ள நிலைமையை ஆராய்ந்து இராணுவத்தின் தொடர்புகளை தேடிபாருங்கள். அவர்கள் ஊடாகவே இது பரவுகின்றது. இதுவே உண்மை.

மக்களின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் தொடர்பான அதிகாரங்கள் குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவை அடிப்படை தேவைப்பாடுகள் அந்தந்தந்த மக்களிடமே விடப்பட வேண்டும். அப்போதே அதில் ஈடுபடுகின்றவர்களுக்கு அதில் பொறுப்புக் கூறும் நிலைமை ஏற்படும். ஆனால் சம்பந்தம் இல்லாதவர்கள், 30 வருடங்களாக வடக்குஇ கிழக்கு மக்களை பலவீனப் படுத்துவதற்காக செயற்பட்ட கட்டமைப்புகள் இப்போது நிர்வாகம் செய்யும் போது அங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

கல்வியை எடுத்துப்பாருங்கள் போர் நடக்கும் போதும், வடக்கு மாகாணம், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்ற இடங்களிலேயே இருந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் 8, 9ஆம் இடத்தில் இருக்கின்றோம். இது ஏன்? போர் நடக்கும் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடு இருந்ததாலேயே ஏதேவொரு வகையில் மிகவும் கஸ்டமான நேரத்தில்கூட அந்தப் பிள்ளைகள் படிக்கக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது திட்டமிடப்பட்ட போதைப் பொருள்களால் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை இப்போது தெற்கிற்கும் பரவுகின்றது.

இந்நிலையில் போதைப்பொருளை எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் பூரண ஆதரவு இருக்கும். தயவு செய்து போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமாயின் இராணுவத்தினரை இது தொடர்பான நடவடிக்கையில் இருந்து முற்று முழுதாக நீக்கி விடுங்கள். வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு அவர்களே மூல காரணம். நீங்கள் உங்களின் திட்டங்கள் தொடர்பில் வெள்ளை காகிதத்தை வெளியிட்டு, இந்த திட்டம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களின் கருத்துகளை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.