ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

66 0

நாட்டு மக்கள் அனைவரும் ஊழலுக்கு எதிர்ப்பு ஆனால் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளது. ஒருசில அரச நிறுவனங்களுக்கு செல்லும் போது மேலதிகமாக பணத்தை கொண்டு செல்ல வேண்டும்.அப்போது தான் தமது வேலை விரைவாக முடிவடையும் என்று மக்கள் கருதுகிறார்கள்.இந்நிலைமை மாற வேண்டும் என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.

ஊழல் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வடமத்திய மாகாண உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளின் உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை (14)  வடமத்திய மாகாண திணைக்கள காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஊழல் குறித்த சர்வதேச தரப்படுத்தல்களுக்கு அமைய 180 நாடுகளில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை 121 ஆவது இடத்துக்கு தரப்படுத்தப்பட்டுள்ளதற்கான காரணத்தை ஆராய வேண்டும்.

ஊழலுக்கு அனைவரும் எதிர்ப்பு என்கிறார்கள்.ஆனால் ஊழல் தொடர்பான பட்டயலில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளது. ஊழலுக்கு எதிரான செயற்பாடு மற்றும் நடவடிக்கைகளை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது.ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அண்மையில் மோட்டார் வாகனத் திணைக்களத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டோம்.அப்போது திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகத்தின் அறையில் இருந்த அலுமாரியில் இருந்து 41 இலட்சம் ரூபாவை கைப்பற்றினோம்.இந்த பணத்தை அவர் அவரது வீட்டில் இருந்து கொண்டுவரவில்லை. திணைக்களத்தின் ஒரு அலகில் அந்த வாரத்துக்குரிய இலஞ்ச பணமே அந்த 41 இலட்சம் ரூபாய்.

இவர்கள் வார இறுதியில் அதாவது ஞாயிற்றுக்கிழமை இலஞ்சமாக பெறும் மொத்த நிதியை பகிர்ந்துக்கொள்வார்கள்.அரச நிறுவனங்களுக்கு செல்லும் போது மேலதிகமாக பணம் கொண்டு செல்ல வேண்டும் அப்போது தான் தமது வேலை விரைவாகவும்,இலகுவாகவும் முடியும் என்று பொது மக்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலைமை மாற வேண்டும்.ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீதியமைச்சுடன் கலந்துரையாடியுள்ளோம். அரச நிர்வாக கட்டமைப்பில் பிரதான அலகாக காணப்படும் உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகள் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புடையது. ஆகவே சிறந்த அரச நிர்வாகத்தை உள்ளுராட்சிமன்ற கட்டமைப்பில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றார்.