அரசாங்கம் ஏற்கனவே வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை குறித்தும், அதுபற்றி தம்முடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமை குறித்தும் சிவில் சமூக அமைப்புக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிவதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான வகையில் தென்னாபிரிக்காவில் இயங்கிய ஆணைக்குழுவை ஒத்த வகையில் உள்நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகள் கடந்த அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
குறிப்பாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்து கடந்த அரசாங்கம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், மதத்தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பிருடன் கட்டம் கட்டமாகப் பல்வேறு சந்திப்புக்களை நடாத்தி, அவர்களிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இனவாதம் மற்றும் மதத்தீவிரவாதம் காரணமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைப் புலன்விசாரணை செய்வதற்குரிய உண்மை மற்றும் மீளிணக்கத்துக்குக்கான ஆணைக்குழுவின் செயற்பாடு விரிவுபடுத்தப்படும் எனத் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தது. அதுமாத்திரமன்றி ஆட்சிபீடமேறியதன் பின்னரும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் தற்போதுவரை அதனை முன்னிறுத்திய எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை எனவும், இதுபற்றி சிவில் சமூக அமைப்புக்களுடன் கலந்துரையாடல்கள் எதனையும் நடாத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி ஜெஹான் பெரேரா, இதுகுறித்து தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் இவ்விவகாரம் குறித்து ஆராயப்பட்டதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விவகாரத்தில் மாத்திரமன்றி சுற்றுலாத்துறையில் பால்புதுமையின சமூகத்தின் பங்கேற்பை ஊக்குவித்தல் மற்றும் மாணவர்களுக்கு உடலியல் ரீதியான தண்டனைகள் வழங்குவதை முடிவுக்குக்கொண்டுவரல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் தம்முடன் கலந்துரையாடப்படாமை குறித்து அவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் அறியமுடிகின்றது.

