2006 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த போது, வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட போது அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் விசாரணைக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) திகதியை நிர்ணயித்துள்ளது.
இந்த வழக்குகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டு, சுருக்கமான முடிவை எடுக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, பிரதிவாதியான சரண குணவர்தன தனது சட்டத்தரணி ஊடாக முன்வைத்த மனுவுக்கு அமையவே இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த வழக்குகள் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது, பிரதிவாதியான சரண குணவர்தன தனது சட்டத்தரணி ஊடாக, குற்றத்தை ஒப்புக்கொண்டு வழக்குகளை சுருக்கமாக முடித்துக்கொள்வதற்காக தான் அளித்த அறிவிப்பை மீளப் பெறுவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்படி, இந்த வழக்குகளை மேலும் விசாரணைக்காக திகதி நிர்ணயிக்குமாறு பிரதிவாதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
அதற்கமைய, குறித்த வழக்குகளை நவம்பர் மாதம் 19 மற்றும் 25 ஆம் திகதிகளில் விசாரணைக்கு அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

