அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும்

49 0

அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைத்துக் கொள்ளக் கோரி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக 28 நாட்களுக்கும் மேலாக முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்ட இடத்திற்கு வியாழக்கிழமை (9) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஜயம் செய்து, அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

 

பல ஆண்டுகளாகப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறந்த சேவைகளை ஆற்றியுள்ளதாகவும், இவர்களுக்கு உடனடியாக நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவர்களுக்கு வழங்க வேண்டிய தீர்வு குறித்து நீதிமன்றத்தில் மத்தியஸ்தத் தீர்ப்பு எட்டப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின்படி, 3 ஆண்டுகளுக்குள் பட்டப்பின் டிப்ளோமாவைத் தொடரும் நிபந்தனையுடன், அவர்களைத் தரம் 2.2 பயிலுநர் ஆசிரியர்களாக உள்வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆனால், இன்று வரை அது நடக்கவில்லை. தேர்தல் காலங்களில் வந்து எம்மத்தியில் பல வாக்குறுதிகளை வழங்குவது வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்கா?’ என்று பாதிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று கேள்வி எழுப்புகின்றனர் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர் வெற்றிடங்கள் இல்லை என்று அரசாங்கம் கூற முடியாது என்றும், சுமார் 35,000 பட்டதாரி வெற்றிடங்கள் உட்பட சுமார் 50,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பல வருடங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர்களை, ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குப் பிறகு ஓரங்கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்று அவர் கண்டித்தார்.

‘அரசாங்கத்திற்கு மனச்சாட்சி இல்லையா? இந்தக் குழுக்கள் குறித்து மேலும் குழுக்களை நியமிக்க வேண்டியதில்லை. இந்த 16,600 பேரின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் வலியுறுத்தினார்.