ஏர்க்கலன்ஸ் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா கடந்த 04.10.2025 சனிக்கிழமை 15:00மணிக்கு நிலமீட்பிற்கும் தாய்மொழி, கலை மற்றும் பண்பாட்டின் வாழ்விற்கும் ஆகுதியானோரை நினைவேந்திப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய விழாவில் பொதுச்சுடரினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார். புதிய கல்வியாண்டில் இணைந்துள்ள மூன்றாந் தலைமுறைக் குழந்தையரையும் சிறப்பு விருந்தினர்களையும் தமிழினத்தின் பண்பாட்டிற்கிசைவாக வரவேற்றனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், ஏர்க்கலன்ஸ் நகரத் துணைமுதல்வர் திரு. பீற்றர் லண்டன், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. கணபதி சிவசுப்பிரமணியம், பிரான்சிஸ்கஸ் தொடக்கப்பள்ளியின் மேலாளர் மற்றும் முன்னாள் மேலாளர் முறையே திரு.யே.ஸ்ராஸ்பேர்கர், திரு. முஸ், கலைப் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ் மாணி மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, தமிழ்க் கல்விக் கழகத் துணை மற்றும் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன், வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு. கந்தையா அம்பலவாணபிள்ளை மற்றும் முன்னாள் தமிழாலய நிருவாகி தமிழ் வாரிதி திரு. நாகலிங்கம் அருந்தவராசா ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றி வைக்க அரங்க நிகழ்வுகள் தொடங்கின. அகவணக்கம், தமிழாலயப்பண் ஆகியவற்றைத் தொடர்ந்து ஏர்க்கலன்ஸ் தமிழாலய நிருவாகி தமிழ் வாரிதி திருமதி அனுசியா குமாரநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுரையாற்றினார்.

ஆசியர்களுக்கான மதிப்பளிப்பைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வாழ்த்தி வழங்கி வைத்தார். துணைப்பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன் அவர்கள் இளைய ஆசிரியர்களை மதிப்பளித்தார்.
கலை நிகழ்வுகள், வாழ்த்துரைகள், மதிப்பளிப்புகள் மற்றும் சமகாலத்தில் கற்றுவரும் தமிழாலய மாணவர்களுக்கான நினைவு மதிப்பளிப்பு எனத் தொடர்ந்த விழாவில் முத்துவிழாவினைச் சிறப்பிக்கும் வகையிற் சிறப்புமலர் வெளியிடப்பட்டது. பெற்றோர்கள் ஒளியேந்தி அரங்கிற்கு எடுத்துவந்த சிறப்பு மலரைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் துணைப்பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன் வெளியிட்டு வைத்தார். முதற் பிரதியைத் திருமதி விஜிதா ரதிதாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார். கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வெளியீட்டு உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் மற்றும் தமிழாலயப் பெற்றோர்களுக்கு நிருவாகி சிறப்புமலர் வழங்கினார். முன்னாள் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் வழங்கியதோடு சிறப்புரையாற்றினார்.
அயல் தமிழாலயங்களின் நிருவாகியர், முன்னாள் ஆசிரியர், முன்னாள் மாணவர், மற்றும் நலன்விரும்பியர் ஆகியோரென மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு 30ஆவது அகவை நிறைவுப் பெருவிழா தமிழரின் தாகத்தைச் சுமந்த தம்மை ஈகம் செய்தோரின் நினைவுடன் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையோடு 22:00 மணிக்கு நிறைவுற்றது.





































































































