ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சு : கெய்ரோவில் முக்கிய சந்திப்பு

52 0

பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீடித்து வரும் இரண்டு ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியப் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை( 6) எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த 20 அம்ச அமைதித் திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே இந்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 20 அம்சத் திட்டம், காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதிப் பூங்காவாக மாற்றுவதை முக்கிய அம்சமாக கொண்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்மதம் தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஒப்பந்தத்தை ஏற்க 72 மணிநேரக் கெடு விதிக்கப்பட்டது. கெடு முடிந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் 20 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளதுடன், இதுகுறித்து விரிவாகப் பேச மத்தியஸ்த நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, காசாவில் உள்ள சில பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாக நெதன்யாகு அறிவித்தார். டிரம்பின் அமைதித் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இஸ்ரேல் தனது படைகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ஹமாஸ் அமைப்பினரிடம் பகிர்ந்துள்ளோம். ஹமாஸ் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதும், போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். பணய கைதிகள் பரிமாற்றம் தொடங்கும். அமைதி நிலவும். 3 ஆயிரம் ஆண்டு பேரழிவின் முடிவு நெருங்குகிறது. அனைவருக்கும் நன்றி. நல்ல செய்திக்காகக் காத்திருங்கள்” என்று கூறியுள்ளார்.

அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதையடுத்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த டிரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கெய்ரோவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் 20 அம்சத் திட்டம் குறித்து விரிவாகப் பேசப்பட இருக்கிறது.