நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேற்றவர்கள் இன்று, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாக கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த முறைமையை நீக்குவதற்கு பதிலாக அதனை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கம்பஹாவில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கஜூ உண்பதற்காக கோடிக்கணக்கில் செலவிட்டுள்ளதாக இந்த அரசாங்கம் குற்றஞ்சாட்டியது. ஆனால் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதனை விட பாரிய ஒரு தொகையை செலவிட்டிருக்கின்றார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேற்றவர்கள் இன்று, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாக கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு பதிலாக அதனை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அன்று மக்களிடம் கூறிய அனைத்தையும் மறந்து நிறைவேற்றதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு ஓரளவுக்கேனும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களில் இந்த சிறப்புரிமைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதையும் நாம் பார்த்திருக்கின்றோம்.
எனவே இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் போது அவற்றை அரசியல் பழிவாங்கல்களுக்காக முன்னெடுக்காமலிருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அந்த பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். ஆனால் அரசாங்கம் வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்கத்தில் மாத்திரமே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.
அரசாங்கத்தின் அனுமதியுடன் எவ்வித சோதனைகளும் இன்றி 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுக்கப்பட்டன. அவற்றிலிருந்த இரு கொள்கலன்களிலிருந்தே அண்மையில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்தக் கொள்கலன்களில் போதைப்பொருட்கள் இருப்பதாக சர்வதேச நிறுவனங்கள் எச்சரித்திருந்த நிலையிலும், அந்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தி இவற்றை எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனவே இந்த விடயத்தில் அரச தரப்பினும் ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது மிகத் தெளிவாகிறது. எனவே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனப் பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

