ஊழலை இல்லாதொழிக்கும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முறையற்ற வகையில் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள போது எவ்வாறு நாட்டில் ஊழல் இல்லாதொழியும், ஊழல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இந்நியமனத்தின் போது அரசியலமைப்பு அரசாங்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ரங்க திஸாநாயக்க நியமிக்கப்பட்ட முறைமை குறித்து குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ரங்க திஸாநாயக்கவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமித்ததை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால் இந்த நியமனம் பற்றி நாங்கள் ஏதும் பேசவில்லை. ஆனால் இந்த மனு அண்மையில் மனுதாரர்களினால் மீளப்பெறப்பட்டுள்ளது. உறுதியான காரணிகள் உள்ள பின்னணியில் மனு மீறப்பெறப்பட்டமை சந்தேகத்துக்குரியது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் பத்திரிகைகளில் விண்ணப்பிக்கும் அறிவித்தலை விடுத்திருந்தார். இந்த பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ அபேவரத்ன மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க ஆகிய இருவரும் பிரதானவர்களாக காணப்பட்டனர்.
இந்த பதவிக்காக கோரப்பட்ட அடிப்படை தகைமை மேல்நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்கவின் விண்ணப்பத்தில் இல்லாத நிலையிலும் அவர் அரசியலமைப்பு பேரவைக்கு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ரங்க திஸாநாயக்கவை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்குமாறு ஜனாதிபதியின் நேரடி நியமனமாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் ஆகியோர் பரிந்துரைத்துள்ளார்கள்.
மாதவ அபேரத்னவின் பெயரை முன்னாள் சட்டமா அதிபர் ரஞ்சய் ராஜரத்னம் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) யசந்த கோதாகொட ஆகியோர் பரிந்துரைத்துள்ளார்கள்.ஆகவே இந்த பரிந்துரை அரசியல் நோக்கமற்றது.
ரங்க திஸாநாயக்கவின் பரிந்துரை தொடர்பில் அரசியலமைப்பு பேரவையில் கேள்வியெழுப்பப்பட்ட போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க ‘ரங்க திஸாநாயக்கவை பரிந்துரைத்தவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களல்ல, ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு பேரவையின் சிவில் உறுப்பினரான தினேஷா சமரரத்ன ரங்க திஸாநாயக்கவின் நியமனத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயத்தை அவர் ஆராய்ந்து பார்த்துள்ளார்.அதாவது மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதியால் 2024.09.25 ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் பணிப்பாளர் நாயக பதவிக்காக விண்ணப்பம் 2024.10.13 ஆம் திகதி கோரப்பட்டுள்ளது.
ஆகவே பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டது பொய் என்பதை உணர்ந்து அவர் இந்த விடயத்தை சபாநாயகர் ஊடாக ஜனாதிபதிக்கு அறிவுறுத்தில், அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளார். இருப்பினும் இவரது கடிதத்தை கருத்திற் கொள்ளாமல் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ரங்க திஸாநாயக்கவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
ஊழலை இல்லாதொழிக்கும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முறையற்ற வகையில் நியமிக்கப்பட்டுள்ள போது எவ்வாறு நாட்டில் ஊழல் இல்லாதொழியும், ஊழல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
ரங்க திஸாநாயக்கவை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமித்ததை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு மீளப்பெறப்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

