அனுர பிரியதர்ஷனவிற்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

49 0

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 6.1 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவழித்து அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உட்பட ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று (01) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டன.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன.

திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையின் கீழ் இந்த வழக்கின் மற்றொரு பிரதிவாதியான முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணியாற்றியதாகக் கூறப்படும் அனுர செனவிரட்னவும் பெயரிடப்படுவார் என்றும் முறைப்பாட்டு தரப்பு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

குறித்த பிரதிவாதி தொடர்பான குற்றப்பத்திரிகையை வழங்குவதற்காக வழக்கை ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.