பதுளையில் கடும் வெயில் ; வறட்சியினால் குடிநீர் பற்றாக்குறை ; விவசாய நடவடிக்கைகளும் பாதிப்பு

39 0

பதுளை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடிக்கும் கடுமையான வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

பதுளை மாவட்டத்தில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக பதுளை, பண்டாரவளை, பசறை, வியலுவ, வெளிமடை மற்றும் மகியாங்கன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை, வெளிமடை பகுதிகளில் காய்கறி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் கால்வாய்களிலும் ஆறுகளிலும் ஓடைகளிலும் நீர் வற்றியுள்ளதன் காரணமாக விவசாய நடவடிக்கைகளை இடைநடுவில் கைவிடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடும் வெயிலினால் நீரேந்து பிரதேசங்களில் நீர் வற்றியுள்ளதன் காரணமாக தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் நீர் விநியோகம் இடம்பெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடும் வறட்சி காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்களும் குறைவடைந்துள்ளன. பசறை டெமேரியா “பீ” தோட்டப் பகுதியில் உள்ள மக்களும் கடுமையான குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வறட்சி நிலைமை நீடிக்கும் பட்சத்தில் கடுமையான நீர் நெருக்கடியை எதிர்நோக்கும் அபாய நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்படுவார்கள் என்ற அச்சம் தோன்றியுள்ளது.