அரசாங்கத்தின் அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பார்க்கும்போது, இதுவரை கால வரவு செலவு திட்டத்துக்கும் அடுத்த வருட வரவு செலவு திட்டத்துக்கும் பாரிய வித்தியாசம் இருக்கப்போவதில்லை. பாரிய கடன் சுமைகளையுடைய வரவு செலவு திட்டமாக அமையும் என்றே எதிர்பார்க்கிறோம் என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
அரசாங்கம் அடுத்த வருடத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் வரவு செலவு திட்டம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீடு சட்டமூலம் வர்த்தமானி படுத்தப்பட்டிருக்கிறது. அதில் பல்வேறு அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கி இருப்பதை பார்க்கும்போது, இதுவரை காலம் நாங்கள் கண்ட வரவு செலவு திட்டத்துக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் காணக்கூடியதாக இல்லை.
ஆனால் அரசாங்கம் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிகளை, அரசாங்கம் வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே எங்களுக்கு தெரிந்துகொள்ள முடியுமாகும்.
அதேநேரம் ஜனாதிபதி 3 ரில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்த்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு கடன் பெறுமாக இருந்தால் அது பாரிய பிரச்சினையாகும். ஏனெனில் இந்த வருடம் முடிவடையும்போது நாங்கள் 7140 மில்லியன் டொலர் கையிருப்பாக வைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
ஆனால் கடந்த வருடத்தில் இருந்து இந்தவருடம் வரை முதல் 7 மாதங்களை எடுத்துக்கொண்டால். 56மில்லியன் டொலரே புதிதாக நாங்கள் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். எஞ்சியிருக்கும் 5 மாதங்களில் நாங்கள் ஒரு பில்லியன் டொலர் வரை சேர்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
அதனால் இந்த ஒரு பில்லியன் டொலரை சேர்த்துக்கொள்ள முடியுமான எந்த வேலைத்திட்டத்தையும் காணக்கூடியதாக இல்லை. கடன் பெற்றுக்கொள்வதை தவிர வேறு வேலைத்திட்டம் இல்லை.
அதனால் இந்த முறை வரவு செலவு திட்டமும் பாரிய கடன் சுமை, சுமத்தப்படும் வரவு செலவு திட்டமாக அமையும் என்பதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில், 2025 வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பில் இருக்கிறது. 2025 வரவு செலவு திட்ட அறிக்கையில் மொத்த அரச செலவில் நூற்றுக்கு 60 வீதம் கடன், வட்டி செலுத்தவே ஒதுக்கி இருந்தது. ஏழை, எளிய மக்களின் நலநோம்புகளுக்காக எதுவும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.
தற்போது கிடைத்துவரும் சைகைகளின் பிரகாரம் இந்த வரவு செலவு திட்டத்திலும் கடந்த வரவு செலவு திட்டத்தைவிட பாரிய வித்தியாசம் இருக்காது என்றே நினைக்கிறோம்.
அத்துடன் கடந்த ஆட்சியாளர்களை விமர்சித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே மக்கள் நம்பினார்கள். ஆனால் . அந்த ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற வேலைத்திட்டங்களையே இவர்கள் முன்னெடுத்துச்செல்கின்றனர்.
ஆட்சியாளர்கள் மாறினாலும் செயற்பாடுகளில் மாற்றம் இல்லை. நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அவ்வாறே முன்னெடுத்துச்செல்கின்றனர் என்றார்.

