அன்னாரின் இறுதிக்கிரிகைகள் வருகின்ற திங்கட்கிழமை 29.09.2025 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதை அறியத்தருகின்றோம்.
இடம்:- Neuer Friedhof , Weinberg Str 1 ,91710 Gunzenhausen

பிறப்பிடம்:- கோலாலம்பூர் மலேசியா
தாயகத்தில் :- மூளாய் யாழ்ப்பாணம், தமிழீழம்
வதிவிடம்:- குன்சன்கவுசன், யேர்மனி (Gunzenhausen, Germany)
எமது தாயகமாம் தமிழீழத்தின் வடபால்த் துலங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின், மூளாயெனும் எழில்மிகு கிராமத்தின் பூர்வீகத் தொடர்ச்சியிலிருந்து, மலேசிய மண்ணின் கோலாலம்பூரிலே அவதரித்து, இளமைக்கால வாழ்வியலைத் தழுவி, யேர்மனிய தேசத்தினை வாழ்விடமாகக் கொண்ட ஒரு சிறந்த தாயகப் பற்றாளனும், விடுதலை உணர்வாளனும், அந்த உன்னதமான உணர்வின் ஈடேற்றத்திற்காக அயராது, தன்னலம் பாராது உழைத்து வந்தவருமான அமரர். திரு. கந்தசாமி முத்துக்குமார் அவர்களை இயற்கை தன்னகத்தே அணைத்துக்கொண்ட துயர்மிகு செய்தி எங்கள் இதயங்களைக் கனதியாக்கிக் கொள்கின்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், யேர்மனியக் கிளையோடு தன்னை 1984 ஆம் ஆண்டு தொடக்கம் முழுமனதோடும், இதயசுத்தியோடும் இணைத்துக்கொண்டு, தமிழ்த்தேசிய விடுதலைக்கான செல்நெறியிலே தனது காத்திரமான வகிபாகத்தினை நல்கினார் என்பதை வரலாறு மறந்துவிடாது. குன்சன்கவுசன் நகரப் பிரதிநிதியாக ஆரம்பித்த தனது பணியின் மூலமாக, தனது உடல் உள வலிமைக்கேற்ப தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றி, அதன் முற்போக்கிலே கோட்டப் பொறுப்பாளராகவும் பணிதொடர்ந்தார்.
தாயகத்திலே போர்சூழ்ந்த களயதார்தங்களுக்கு அமைவாகவும், எமது மக்களுடைய இயல்பு வாழ்வுக்கான திட்டமிடல்களை உருவாக்கி அதனை புலம்பெயர்ந்த மக்களுடைய கவனங்களுக்காக நகர்த்தும் போதெல்லாம், பங்களிப்புக்களால் பங்குகொள்ளும் புலம்பெயர் தேசத்து உறவுகளின் கூட்டுப் பண்புருவின் முன்மாதிரியான செயற்பாட்டாளராக இடைவிடாது உழைத்தார். தலைமைத்துவத்தின் பரிந்துரைகள், சுற்றுநிருபங்களின் வெளிப்படுத்தல்கள், பயிற்சிப் பட்டறைகள், கருத்தமர்வுகள், கலை பண்பாட்டு விழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் இப்படியாக நீண்டு பெருத்த விடுதலைத் தாகத்தின் அடையாளங்களிலே, பல்வேறுபட்ட பொறுப்பாளர்களின் ஆளுகைக்குட்பட்ட காலங்களை கடந்து வந்தார் என்பதைக் காலமே கோடிட்டுக் கொள்ளும். அத்தனை காலங்களிலும் தன்னை நிலைநிறுத்திப் பணியாற்றிய இப் பற்றாளனின் உடல் உபாதை அவரைச் சோர்வாக்கி மூச்சை நிறுத்திக்கொண்டாலும், அவரது ஆழ்மனம் தாங்கிநின்ற தாகங்கள் உறங்காது.
இவரது பிரிவுத் துயர் சுமந்து வாடும் குடும்பத்தார், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரோடும் நாமும் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு, அவரது புனித ஆன்மா அமைதிபெற இயற்கைதனை வேண்டிக்கொள்வதோடு, அவரது உள்மனம் தாங்கிச் சுமந்த விடுதலைக் கனவை நாமும் பகிர்ந்து சுமந்து இடைவிடாது தொடர்ந்து முன்கொண்டு செல்வோமென உறுதி கொள்வோமாக.


