நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியா? மேக்ரான் வைக்கும் முக்கிய நிபந்தனை

103 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் 2025-ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசுக்கு தெரிவாகும் வாய்ப்பு குறித்து சர்வதேச அளவில் விவாதம் எழுந்துள்ளது.

ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், “காசா போரை முடிக்காமல் அந்த பரிசு கிடைக்க முடியாது” எனக் கூறி, முக்கிய நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

BFM TV-க்கு அளித்த பேட்டியில், மேக்ரான், “இந்த போரை முடிக்க முடித்து வைக்கக்கூடிய ஒரே நபர் அமெரிக்க ஜனாதிபதி தான்” எனக் கூறியுள்ளார்.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்ளை வழங்குவதால், அவர்களிடம் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

“பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற நாடுகள் இவ்வளவு தாக்கம் செலுத்த முடியாது” என்றும் அவர் கூறினார்.

 

அதே நாளில், ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய ட்ரம்ப், “காசா போரை உடனடியாக நிறுத்த வேண்டும். அமைதிக்கான பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும்” என்றும் “நான் ஏற்கெனெவே 7 மோதல்களை முடித்துவைத்துள்ளேன். அமைதி வேண்டும்” எனக் கூறினார்.

ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்க இஸ்ரேல், கம்போடியா,பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பரிந்துரைத்துள்ளன. ஆனால், “இந்த போரை நிறுத்தாமல் அந்த பரிசு சாத்தியமில்லை’ என மேக்ரான் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், ட்ரம்ப் மீது சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரிக்கிறது. காசா மோதலை முடிவுக்கு கொண்டுவர அவர் எடுக்கும் நடவடிக்கையே, அவரின் நோபல் பரிசு வாய்ப்பை தீர்மானிக்கக்கூடியது.