மொடியுலர் கல்வி ஆசிரியர் பயிற்சி நவம்பர் இறுதிக்குள் நிறைவு

42 0

2026 ஆம் ஆண்டு தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான மொடியுலர் கல்விக்கு ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை 2025 நவம்பர் இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்தார்.

 

புதிய கல்வி சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

பயிற்சியாளர்களைப் பயிற்றுவிக்கும் (Trainer of Trainers – TOT) திட்டத்தில் சுமார் 80% நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பயிற்சியாளர்கள் தற்போது மஹரகமவிலுள்ள தேசிய கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டம், அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி, கோட்பாட்டு மற்றும் நடைமுறை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் குழுக்களை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் மூலம் வலய மற்றும் தொகுதி மட்டங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் நவம்பர் 2025 இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குத் தேவையான மொடியுலர்களை அச்சிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.