வவுனியா நகரசபை மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அதாவது நகரசபை என்ற பெயர்ப்பலகை மாநகரசபையாக தரமுயர்ந்துள்ளது. ஆனால் மாநகரசபைக்கான அடிப்படை வசதிகள், ஆளணிகள் வழங்கப்படவில்லை . 2026 ஆம் ஆண்டிலாவது ஆளணியை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். வவுனியா மாவட்டத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனம், ஒரு அம்பியூலன்ஸ் மட்டுமே உள்ளன. தனியான ஒரு பிரிவு இல்லை. இந்த பிரச்சினைக்கும் உடன் தீர்வு காண வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எமது பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள வீதிகளை திருத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .இந்த உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுபாட்டிலுள்ள வீதிகளை திருத்துவதற்கான நிதி ஒதுக்கீடு அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படாமல் அரசாங்க அதிபர்களுக்கூடாக அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஒதுக்கப்பட்ட நிதிக்கான வீதிகளின் தெரிவு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரியாமல் இஅதில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளாமல் திருத்தப்படுவதற்கான வீதிகளின் பெயர் பட்டியல் வேறு எங்கேயோ தயாரிக்கப்பட்டு அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அந்த உள்ளூராட்சி மன்றங்களின் பட்டியலில் இருக்கின்ற பெயர்களை ஆராய்ந்து பார்க்கின்றபோது சில உள்ளூராட்சி மன்றங்களில் உதாரணத்திற்கு செட்டிகுளம் பிரதேச சபையை பொறுத்தவரையில் ஒரு வட்டாரத்திற்கு 18 வீதிகள் ஒதுக்கப்பட்டு வேறு சில மிகவும் மோசமான வட்டாரங்களுக்கு எந்த ஒதுக்கீடுகளும் இல்லாத நிலை காணப்படுகின்றது.
எனவே வீதி திருத்தங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த நிதி யாரோ சிலரால் தீர்மானிக்கப்பட்டு அரச அதிபர்களுக்கு அனுப்பப் பட்டு அவர்கள் ஊடாக நிதி வழங்கப்பட்டு தான் வீதி திருத்தங்கள் நடைபெறும் நிலையில் உள்ளூராட்சி மன்றங்கள் ஒரு ஒப்பந்தகாரர்களைப்போன்றே உள்ளன. இது ஒரு பாரதூரமான விடயம். இந்த நிதி ஒதுக்கீட்டுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் இதில் கூடிய கவனம் எடுத்து இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் தற்போது ஒவ்வொரு வட்டாரங்களாக சென்று மக்களோடு கலந்துரையாடி அந்த மக்களின் தேவைகளை அறிந்து அந்தப் பிரதிநிதிகள் ஒரு பட்டியலை வைத்துள்ளார்கள்.இவ்வாறான நிலையில் அந்த உள்ளூராட்சி மன்றங்களுடன் தொடர்பில்லாதவர்கள் இந்த வீதிகளை தெரிவு செய்வதன் மூலம் நிதி ஒதுக்கீடு அதிக தேவையுள்ள மக்களுக்கு போய் சேர்வதனை தடுக்கின்ற செயற்பாட்டை செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வலியுறுத்துகின்றேன்.
வவுனியா நகர சபை மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அதாவது நகரசபை என்ற பெயர்ப்பலகை மாநகரசபையாக தரமுயர்ந்துள்ளது. ஒரு மாநகரசபைக்கான அடிப்படை வசதிகள், ஆளணிகள் அங்கில்லை. எனவே அரசு 2026 ஆம் ஆண்டிலாவது ஆளணியை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை முழு வவுனியா மாவட்டத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனம், ஒரு அம்பியூலன்ஸ் மட்டுமே உள்ளன. தனியான ஒரு பிரிவு இல்லை. இதற்கு முக்கிய காரணம் ஆளணி, நிதி இல்லாமையே ஆகும் என்றார்.

