களுத்துறை வஸ்கடுவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (23) புகையிரத வீதியை கடக்க முற்பட்ட கார் ஒன்று கடுகதி ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ கோன்கஸ் சந்திக்கருகில் செவ்வாய்க்கிழமை (23) காலை மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகையிரத கடவைக்கருகில் புகையிரதம் வருவாதாக சமிக்ஞை அளிக்கப்பட போதும் குறித்த கார் சாரதி அதை கவனத்தில் கொள்ளாது வாகனத்தை முன்னோக்கிசெலுத்திய நிலையில் ரயிலில் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், வாகனத்தில் சிக்கியிருந்த இருவரையும் பிரதேசவாசிகள் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் மீட்டுள்ளனர். இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

