சந்தை அடிப்படையிலான விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையும் (JICA), இலங்கையின் விவசாயத் திணைக்களமும் இணைந்து, ‘சிறுபயிர்களின் மூலம் விவசாயிகள் வலுவூட்டல் மற்றும் மேம்படுத்தல்’ (SHEP) அணுகுமுறை குறித்த சர்வதேசப் பயிற்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடாத்தியுள்ளன.
ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி, செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை பேராதனையில் உள்ள கண்ணொருவவில் இடம்பெற்றது.
பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், மாலைதீவுகள் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 32 சிரேஷ்ட அரச அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
சிறு விவசாயிகள் மத்தியில் சந்தை அடிப்படையிலான விவசாயத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்தப் பயிற்சி, ஜெய்காவின் ‘அறிவு இணை-உருவாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தின்’ (KCCP) ஒரு பகுதியாக, ஜப்பானில் நடைபெற்ற இரண்டு வார தத்துவார்த்தப் பயிற்சியின் கள அடிப்படையிலான விரிவாக்கமாகும்.
இந்த அணுகுமுறையின் மூலம், இலங்கை முன்னோடித் திட்டப் பகுதிகளில் உள்ள சிறு காய்கறி விவசாயிகளின் வருமானம் 81 வீதம் அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அணுகுமுறை, பாரம்பரியமான “விளைவித்து விற்பனை செய்யும்” மனநிலையில் இருந்து, “விற்பனைக்காக விளைவிக்கும்” மனநிலைக்கு விவசாயிகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு கென்யாவில் ஜெய்க்காவால் தொடங்கப்பட்ட SHEP அணுகுமுறை, 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என ஜெய்கா தெரிவித்துள்ளது.
பயிற்சியின் போது, பங்கேற்ற அதிகாரிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேரடி சந்தை ஆய்வுகளை மேற்கொண்டனர். நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனையில் உள்ள விவசாயக் குழுக்கள், SHEP கொள்கைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தமது வருமானம் அதிகரித்துள்ளதாகவும், உற்பத்திச் செலவுகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
பயிற்சியின் நிறைவில், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் நிகால் ரணசிங்க, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. கே.ஏ.டி.டபிள்யூ. விக்ரமாராச்சி உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டு, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
பயிற்சியின் முடிவில், பங்கேற்ற நாடுகள் தங்கள் நாடுகளில் நிலையான, சந்தை அடிப்படையிலான விவசாயத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை உத்திகளுடன் புறப்பட்டுச் சென்றனர்.




