நான்கு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

65 0

நாடு முழுவதும் நான்கு பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்துகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி,  இலுப்பகடவை பொலிஸ் பிரிவில் யாழ்ப்பாணம்-மன்னார் வீதியில் உள்ள கல்லியடி பகுதியில் நேற்று பிற்பகல் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்புறத்தில் இருந்த பயணி உள்ளிட்ட இருவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், இலவாலியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, முல்லேரியா பொலிஸ் பிரிவில் உள்ள கடுவளை – அங்கொட வீதியில் உள்ள அங்கொட சந்தியில், கடுவளையிலிருந்து அங்கொட நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள்; ஓட்டுநர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொதட்டுவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை – தம்புள்ளை வீதியில் நேற்று மாலை ஹபரணையிலிருந்து தம்புள்ளை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொரி, தம்புள்ளை நகரில் வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் காயமடைந்த பாதசாரி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளையைச் சேர்ந்த 56 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொடிகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள கச்சாய் – கொடிகாமம் வீதியில் உள்ள கச்சாய் வடக்கு முதலாம் குறுக்குத் தெரு அருகில், கச்சாய் கொடிகாமம் நோக்கிச் சென்ற கன ரக வாகனம் ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அதில் பயணித்த பெண்ணொருவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மிருசுவில் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய பெண் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.