தங்காலை, நெடோல்பிட்டியவில் காணியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்த சோதனை அறிக்கையை அடுத்த வாரம் பொலிஸாரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை NDDC) தெரிவித்துள்ளது.
குறித்த பொருட்கள் தொடர்பான சோதனைப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மித்தெனிய பகுதியில் காணியொன்றில் இருந்து ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, தங்காலை நெடோல்பிட்டிய பகுதியிலும் கந்தானை பகுதியிலும் இதேபோன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அந்த பொருட்களின் மாதிரிகள் சோதனைக்காக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களதிடமும் ஒப்படைக்கப்பட்டன.
அதன்படி, மித்தெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் இருப்பதை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களமும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன.
சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் மெத்தம்பேட்டமைன் இரசாயனங்கள் இருப்பதாகக் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தங்காலை நெடோல்பிட்டிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் சோதனை அறிக்கையை அடுத்த வாரத்திற்குள் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
கந்தானை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் சோதனை அறிக்கையை விரைவில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மேலும் தெரிவித்துள்ளது.

