நீர்த்தேக்க எல்லைப் பகுதிகளுக்குள் காணப்படும் குடியிருப்புகளை சட்டவிரோதமானவையாக அறிவித்து இடிக்கும் அறிவிப்புகளை வெளியிட்ட அதிகாரிகளின் செயற்பாட்டை அமைச்சர் வசந்த சமரசிங்க கடுமையாக சாடியுள்ளார். அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (20) நடைபெற்றது.
இதன்போது, அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிக்கையில்,
அநுராதபுரம் மாவட்டத்தில் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களை இடிக்கும்
தீர்மானத்தினை யார் அறிவித்தார்கள். குறித்த விடயம் சம்பந்தமாக மீளாய்வுகுழுவொன்றை அமைக்கும் தீர்மானத்தினை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அந்தக்குழுவின் ஆய்வு நடவடிக்கைகளுக்கு முன்னதாக அதிகாரிகள் எவ்வாறு அறிவிப்பை விடுவிக்க முடியும் என்ற கேள்வி எழுக்கின்றது. அதிகாரிகள் அறிவிப்பைச் செய்வதற்கு யார் அங்கீகாரம் வழங்கியது. அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அரச நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்களின் கோபத்தைத் தூண்டும் அபாயத்தை ஏற்படுத்துவதாககும்.
சட்டவிரோத ஹோட்டல்கள் உருவாகும்போது அவை நிர்மாணிக்கப்படுகின்றபோதே ஏன் எல்லைகள் குறிக்கப்படவில்லை. அச்சமயத்தில் அதிகாரிகள் நீர்த்தேக்கங்களின் எல்லைகளை அறிந்திருக்கவில்லையா. பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்கான அரசாங்க முயற்சிகளைத் தடுக்க வேண்டாம்.
சட்டவிரோதமான விடயங்களை அகற்றுவதாக இருந்தாலும் அதற்கான முறையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மக்களை துன்புறுத்தும்படியாகச் செயற்படக்கூடாது என்றார்.

