தேர்தல் முறைமைகளில் தேவைற்ற திருத்தங்களை முன்வைத்து சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை நீக்க நினைத்தால் அது ஆட்சியமைக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். இவ்வாறு அநாவசியமாக தேர்தல் முறைமைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு இடமளிக்க கூடாது. இதற்காக எதிர்க்கட்சிகளுக்குள் இணக்கப்பாட்டை ஏற்பாடுத்திக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
20ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் வரலாற்று ரீதியில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முக்கிய தீர்மானங்களை எடுத்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பயணித்து வந்த ஒரு கட்சியாகும். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு வாக்களிக்காவிட்டால், அவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். இதேபோன்று ஆளுந்தரப்பிலுள்ள பலரும் பல கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆட்சி காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களால் நிறுத்தி ஜே.வி.பி. இன்று, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களை அச்சுறுத்துகின்றது. கட்சி அலுவலக பிரச்சினைக்காக பொது வெளியில் அரசாங்கம் எவ்வாறு செயற்பட்டது என்பதையும் பார்த்தோம். இது மிகவும் அபாயம் மிக்க சர்வாதிகாரத்தை நோக்கிய பயணமாகும்.
வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் வீசி எறிந்து கொண்டிருக்கும் அரசாங்கம், தேர்தல் முறைமையில் கைவைத்துள்ளது. அரசாங்கமொன்றுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அதன் நடத்தை எவ்வாறிருக்கும் என்பதை நாம் அறிவோம். எம்மால் முன்வைக்கப்பட்ட தேர்தல் முறைமையின் காரணமாகவே 3 சதவீதமாகக் காணப்பட்ட ஜே.வி.பி.க்கு கூட உள்ளுராட்சிமன்றங்களில் பிரதிநிதித்துவம் கிடைத்தது. அந்த முறைமை இல்லாதொழிக்கப்பட்டால் நீங்கள் எதிர்க்கட்சிக்கு வரும் போது அது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணில், பிரதமராக பதவி வகித்த போது சமர்ப்பித்த மாகாணசபை முறைமையை நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனால் இன்று 12 ஆண்டுகளாக மாகாணசபைகள் இல்லை. தேர்தல் முறைமைகளில் தேவைற்ற திருத்தங்களை முன்வைத்து சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை நீக்க நினைத்தால் அது ஆட்சியமைக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். இவ்வாறு அநாவசியமாக தேர்தல் முறைமைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு இடமளிக்க கூடாது. இதற்காக எமக்குள் இணக்கப்பாட்டை ஏற்பாடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

