அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் காணப்பட்டாலும் 5 ஆண்டுகளில் பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16 000 பட்டதாரிகளின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இவர்களது பிரச்சினைக்கு அரசாங்கம் துரித தீர்வினை வழங்காவிட்டால் சத்தியாக்கிரகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை வியாழக்கிழமை (18) சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் இந்த பட்டதாரிகளு;டன் வழக்கு தாக்கல் செய்து சட்டத்தரணி என்ற ரீதியில் அவர்களுக்காக நீதிமன்றம் சென்றிருக்கின்றேன். அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவின் காலத்தில் சில பிரச்சினைக்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. அதற்கமைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் காணப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லை 25 இலிருந்து 45ஆக அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
அதற்கமைய நீதிமன்றமும் 45 வயது வரை நியமனத்தை வழங்குமாறு தீர்ப்பளித்தது. இந்த பட்டதாரிகளில் பெருமளவானோர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் காணப்பட்டாலும் பாடசாலைகளில் பாட நேரங்கள் வழங்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தலில் ஈடுபட்டவர்களாகவுள்ளனர். இவர்கள் கற்பித்த மாணவர்கள் இன்று ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர். ஆனால் இவர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
இது உண்மையில் மனித உரிமை மீறலாகும். கடந்த 5 ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணியாற்றிய 16 000 பட்டதாரிகளுக்கு அரசாங்கம் நினைத்தால் நியமனங்களை வழங்க முடியும். காரணம் சகல மாகாணங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே மீண்டும் போட்டிப்பரீட்சையை நடத்த வேண்டிய அவசியமில்லை. ;இது இலகுவாக தீர்க்கப்படக் கூடிய பிரச்சினையாகும். 18ஆம் திகதி இவர்கள் ஜனாதிபதியை சந்திக்க சென்ற போது அதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கல்வி அமைச்சும் இவர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை. எனவே தான் இன்று இரு வாரங்களாக இவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கமே இவர்களை இந்த நிலைமைக்கு தள்ளியுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் சத்தியாக்கிரகம் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் என்றார்.

