ஜப்பானில் 100 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக உயர்வு

63 0

ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

முதியோர் தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர். இந்த சாதனை, உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட நாடாக ஜப்பானை நிலைநிறுத்தியுள்ளது.

100 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். 1963-ல் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட போது 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 153 பேர் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை 1998 இல் 10,000 ஆகவும், 2012 இல் 50,000 ஆகவும் உயர்ந்தது. தற்போது, ஒரு ஒலட்சத்தை நெருங்கியுள்ளது.

114 வயதான ஷிகேகோ ககாவா என்பவரே ஜப்பானில் வாழும் மிக வயதான பெண் ஆவார். அவர் 80 வயதைக் கடந்தும் மகப்பேறு மருத்துவராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றியுள்ளார். மிக வயதான ஆண், 111 வயதான கியோடகா மிசுனோ ஆவார்.

ஷிமானே மாகாணத்தில் அதிகபட்சமாக ஒவ்வொரு 100,000 பேருக்கும் 168.69 பேர் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். அதே சமயம், சைட்டாமா மாகாணத்தில் இந்த விகிதம் மிகக் குறைவாக உள்ளது.

ஜப்பானின் சுகாதார அமைச்சர் டகாமரோ புகோகா கூறுகையில், ஜப்பானியர்கள் மீன் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உட்கொள்வதும், தினசரி நடைப்பயிற்சியும் இதற்கு முக்கிய காரணங்கள் என்றார்.

நீண்ட ஆயுள் ஒரு சாதனை என்றாலும், ஜப்பான் கடுமையான மக்கள் தொகைக் குறைவு மற்றும் முதுமையடையும் சவால்களை எதிர்கொள்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இது நாட்டின் சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் சந்தைகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.