உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய ‘எலும்புப் பிசின்’ (bone glue), எலும்பியல் சிகிச்சையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ‘போன்-02’ (Bone-02) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவப் பசையானது, எலும்பு முறிவுகளை மூன்று நிமிடங்களுக்குள் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.
கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு ஆய்வுக் குழுவினர் இந்தப் பசையை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான லின் சியான்ஃபெங், கடலுக்கு அடியில் உள்ள பாலத்தில் சிப்பிகள் எப்படி உறுதியாக ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதைக் கவனித்து இந்த பிசினை உருவாக்க உத்வேகம் பெற்றதாகக் கூறுகிறார்.
இரத்தம் நிறைந்த சூழலிலும், இந்த பிசின் இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் எலும்பை துல்லியமாக ஒட்டி உறுதிப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், எலும்பு குணமடைந்த பிறகு, இந்த பிசின் இயற்கையாகவே உடலால் உறிஞ்சப்பட்டுவிடும். இதனால், இரும்புத் தகடுகள் அல்லது தழும்புகளை அகற்றுவதற்காக இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
வழக்கமான அறுவை சிகிச்சை முறைகளுக்குப் பதிலாக, இந்த பிசினைப் பயன்படுத்தும்போது, எலும்பு முறிவுகளை மிகக் குறைந்த நேரத்தில் சரிசெய்ய முடியும். இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இது வெற்றிகரமாகச் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிசினால் ஒட்டப்பட்ட எலும்புகள் அதிகமான பிணைப்பு சக்தியைக் கொண்டிருப்பது ஆய்வக சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பாரம்பரிய உலோக உள்வைப்புகளுக்கு மாற்றாக இருக்கலாம் எனவும் இந்த பிசின் தொற்று மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பு, எலும்பியல் துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

