“கெஹெல்பத்தர பத்மே” , “பாணந்துறை நிலங்க” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு வீடு கண்டுபிடிப்பு!

50 0

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” மற்றும் “பாணந்துறை நிலங்க” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட வீடு ஒன்று அம்பாந்தோட்டை – மயுரபுர பிரதேசத்தில் வைத்து களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட “பாணந்துறை நிலங்க” என்பவரின் நெருங்கிய சகாவான எம்பிலிப்பிட்டிய சுரங்க என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எம்பிலிப்பிட்டிய சுரங்க என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் வெல்லவாய – கிரியகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய சம்பத் பண்டார என்பவர் ஐஸ் போதைப்பொருளுடன் களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பத் பண்டார என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த மூவர் இந்த வீட்டில் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்து வந்ததாகவும் தற்போது அவர்கள் மூவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் இந்த வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காரானது வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் பேரில் பதிவுசெய்யப்பட்டது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த வீட்டிலிருந்து ஐஸ் போதைப்பொருளை  உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் இரரசாயனம் 52 கிலோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.

இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” மற்றும் மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் கந்தானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்தும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.