சர்வதேச கடல்சார் மாநாடான 12ஆவது ‘காலி கலந்துரையாடல் (கோல் டயலொக்)’ எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த மாநாடு, நாடளாவிய ரீதியிலுள்ள கடற்படைத் தளபதிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கடல்சார் நிபுணர்களை ஒன்றிணைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் அத்மிரல் டேர்டமியன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையிலுள்ள கலங்கரை விளக்கம் உணவக வளாகத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளவத்தையில் உள்ள கடற்படை மண்டபத்தில் இம்மாடு இடம்பெறவுள்ளது. கடற்படையின் சொந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், செலவு மற்றும் தளவாடங்களை திறம்பட நிர்வகிக்கவும், மாநாடு கொழும்பில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த மாநாடு, உலகெங்கிலும் உள்ள கடற்படைத் தளபதிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கடல்சார் நிபுணர்களை ஒன்றிணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆக்கப்பூர்வமான உரையாடலை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஆண்டின் கருப்பொருள் ‘மாறும் சூழலில் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் கண்ணோட்டம்’ என்பதாகும். இது தற்கால உலகுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தலைப்பாகும்.
உலகளாவிய வர்த்தகம் மற்றும் வலுசக்தி பாதுகாப்புக்கு இந்தியப் பெருங்கடல் மிகவும் முக்கியமானது. இருப்பினும், புவிசார் அரசியல் போட்டி, கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற காரணங்களால் இது அதிகரித்து வரும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது.
இந்த மாநாடு பின்வரும் ஐந்து முக்கிய கருப்பொருட்கள் மூலம் இந்த அழுத்தமான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் என நம்புகின்றோம்.
முதலாவது கடல் சூழல் என்ற கருப்பொருளானது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், கடல்சார் நிர்வாகம் என்ற கருப்பொருளானது விதி அடிப்படையிலான ஒழுங்கை வலுப்படுத்துவதாகவும், கடல்சார் பொருளாதாரம் என்ற கருப்பொருளானது நீலப் பொருளாதாரத்தை பொறுப்புடன் விடுவிப்பதாகவும், கடல்சார் நிலைத்தன்மை என்பது வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு இடையிலான சமநிலையை ஏற்படுத்துவதாகவும், தூய்மையான இந்தியப் பெருங்கடல் என்ற கருப்பொருளானது எதிர்கால தலைமுறைகளின் நலனுக்காக மாசுபாட்டை எதிர்த்தலாகவும் அமையும்.
இம்மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இன்றைய நிலவரப்படி 33 நாடுகள் மற்றும் 12 சர்வதேச அமைப்புகள் மாநாட்டில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தியுள்ளன.
இது ஒரு பெரிய இராஜதந்திர சாதனையாகும். இவ்வளவு பெரிய பங்கேற்பு, இந்தியப் பெருங்கடலின் எதிர்காலத்தை கூட்டு மற்றும் ஒத்துழைப்பு முயற்சிகள் மூலம் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதை உலகளாவிய ரீதியில் அங்கீகரிப்பதைக் காட்டுகிறது.
இதில் விவாதிக்கப்படவுள்ள பிரச்சினைகள் வெறும் கருத்துக்கள் அல்ல. அவை நாட்டின் பாதுகாப்பு, செழிப்பு மற்றும் வாழ்க்கை முறைமையை நேரடியாக பாதிக்கின்றன.
இந்த நிகழ்வின் வழிநடத்தல் குழுவின் தலைவரான வடக்கு கடற்படை கட்டளை தளபதி நியமிக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றி, ‘அனைத்து நாடுகளுக்கும் நண்பர்கள்’ என்ற இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு சான்றாகும்.
மாநாட்டின் முக்கிய கவனம் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகும். இலங்கையின் மூலோபாய இருப்பிடம், பாதுகாப்பான கடல்வழித் தடங்களுக்கு ஒரு முக்கிய இடமாக அமைகிறது.
மேலும், பல வெளிநாட்டு கடற்படை கப்பல்கள் இலங்கையின் துறைமுகங்களுக்கு வருகை தருவதால், நாட்டின் கடற்படை இராஜதந்திரம் சர்வதேச ஒத்துழைப்பை ஈர்ப்பதில் மிகவும் வெற்றிகரமாக உள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கான ஒரு சிறந்த தளமாக ‘காலி கலந்துரையாடல் (கால் டயலாக்)’ செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கேற்கும் கடற்படைகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தையும் உலகளாவிய ரீதியிலான அணுகலையும் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கம்போடியா, கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மன், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான் , கென்யா, மலேசியா, மாலைத்தீவு, மாரிஷியஸ், மெக்சிகோ , மெங்கோலியா, மியான்மர், நமீபியா, நெதர்லாந்து, நைஜீரியா, ஓமான், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஸ்பெயின் , ஸ்வீடன் , சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, உக்ரைன், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சாம்பியா உள்ளிட்ட நாடுகளில் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளன என்றார்.

