கண்டி பல்வகைமை போக்குவரத்து முனைய வேலைத்திட்டத்தின் 35 சதவீத முன்னேற்றம்

50 0

கண்டி பல்வகை போக்குவரத்து முனையத்தின் அபிவிருத்தி  தொடர்பான நேரடி  கண்காணிப்பு விஜயம் ஒன்றை மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தலைமையிலான குழு ஒன்று சனிக்கிழமை (13) மேற்கொண்டது.

இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள்  2024 இல் தொடங்கப்பட்டது. இதற்கு 69.6 மில்லியன் யூ.எஸ். டொலர்கள் செலவாகும் என உலக வங்கி மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் கடன் திட்டத்தின் கீழ் இது நடைபெறுகிறது.

மூன்று ஆண்டுகளுக்குள் இது முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்டி நகரில் தரமான போக்குவரத்து சேவைகளை வழங்கும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டு வரும் இலங்கையின் மிகப்பெரிய பல்வகைமை போக்குவரத்து முனையத்தின் செயற்பாடு மற்றும் திட்ட மதிப்பாய்வு, அதன் தற்போதைய நிலை மற்றும் நிர்மானத்தின் போது  எதிர்கொள்ளும் சிக்கல்களை ஆராய்வதற்கும் ஒரு கலந்துரையாடலும்  மேற்படி  கள விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்டது.

இந்த பல்வகைமை போக்குவரத்து முனைய அபிவிருத்தி  திட்டத்தின் தற்போதைய கட்டுமானத்தில் முப்பத்தைந்து சதவீத முன்னேற்றம் இருப்பதாக மேற்படி  விஜயத்தின் போது தெரியவந்துள்ளது.

மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மல்டி மொடல் டெர்மினல் திட்டத்தின் திட்ட இயக்குநர் மஞ்சுள ரத்நாயக்க, ரயில்வே துறை அதிகாரிகள், செயற்திட்ட  அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.