வட கொரியாவில், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளன.
தென்கொரியாவின் பிரபல ‘கே-டிராமாக்கள்’ (K-Dramas) உட்பட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களை விநியோகித்ததற்காக, பல வட கொரியர்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர் என வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் ஜேம்ஸ் ஹீனன் தெரிவித்தார்.
இந்த 14 பக்க அறிக்கை, 2014 முதல் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை வட கொரிய அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கைக்கு அனுமதியளித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்; தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை, வட கொரியாவில் மனித உரிமைகள் எந்த அளவுக்கு மீறப்படுகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

