கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடியை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதவியை துறப்பாரா எனச் சவால் விடுத்த யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சுட்டிக்காட்டி கடற்றொழில் அமைச்சு தொடர்பில் பல கேள்விகளை அமைச்சரிடம் முன்வைத்தார்.
முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இரண்டு வாரம் காலவகாசம் கோரினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற அமர்வின்போது நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்திரசேகர் கடற்றொழில் அமைச்சராக பதவி வகிப்பது மகிழ்ச்சிக்குரியது. கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் பல முறைப்பாடுகளை முன்வைக்கிறார்கள். இருப்பினும் இந்த முறைப்பாடுகள் குறித்து தாங்கள் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது கவலைக்குரியது.
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த உயரிய சபைக்கு ஆதாரபூர்வமான விடயங்களை முன்வைக்க முடியுமா, இல்லையென்றால் ஏன், இலங்கையில் உள்ள நீரியல் வளங்கள் தொடர்பான சட்டங்களில் கரைவலை மற்றும் சுருக்கு வலைகள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. தாங்கள் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இவ்விரு சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் முறைப்பாடு.
இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை? இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளினால் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் எந்தவொரு மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் தங்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.மீனவ சங்கங்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் எத்தனை, அந்த பேச்சுவார்த்தைகளினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்னவென்பதையும் இந்த சபைக்கு அறிவிக்க முடியுமா?
கரையோர பிரதேசங்களில் கடலட்டை பண்ணைகளுக்கு அனுமதி வழங்குவது கடற்றொழில் அமைச்சின் பிரதான பொறுப்பாகும்.இதுவரையில் இதனை நியாயமான முறையில் தாங்கள் இதனை மேற்பார்வை செய்யவில்லை என்பது பொதுமக்களின் முறைப்பாடு. அமைச்சில் கையூட்டல் பெறப்படுகிறது என்பதும் பொதுமக்களின் முறைப்பாடு. தங்களின் பினாமிகளினால் இந்த கையூட்டல் பெறப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. அதற்குரிய ஆதாரங்களை நான் சபைக்கு சமர்ப்பித்தால் அதனை ஏற்றுக்கொண்டு தங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா?
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீன்பிடி இயக்குநரை தாங்கள் இடமாற்றம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தாங்கள் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் அமைச்சின் பதவிகளில் இடம்பெற்ற மாற்றங்கள் என்னென்ன, முறையான நேர்காணல் இடம்பெற்றதா, முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா?
உங்களின் அமைச்சில் மோசடி இடம்பெறுவதை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியை நான் சபைக்கு சமர்ப்பித்து குற்றச்சாட்டை நிரூபிக்கிறேன். அதனை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவியை விலக முடியுமா, மயிலிட்டி மற்றும் குறிகட்டுவான் பகுதியில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் என்ன அவற்றில் விபரத்தை சபைக்கு முன்வைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் காலவகாசம் கோருகிறேன் என்றார்.

