கமாண்டோ சலிந்துவுக்கு தோட்டாக்கள் வழங்கிய இராணுவ அதிகாரி கைது

40 0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கருதப்படும் கமாண்டோ சலிந்துவுக்கு T-56 துப்பாக்கிகளுக்கான தோட்டாக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், இராணுவத்தின் ஒரு லுதினன் கர்னல் 11ஆம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கைது நடவடிக்கையை மேல்மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவு முன்னெடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி, கைது செய்யப்படும் தருணத்தில் முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் உள்ள இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணைகளின் போது, குறித்த அதிகாரி கணேமுல்ல கமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் T-56 துப்பாக்கிகளுக்கான 260 தோட்டாக்களை, இரண்டு முறை, மொத்தம் ரூ. 6.5 இலட்சத்திற்கு கமாண்டோ சலிந்துவுக்கு விற்றுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் அந்த அதிகாரிக்கு எதிராக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.