பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனக்கு எதிராக 14 நாட்களுக்குள் மானநஸ்ட வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்து நட்டஈடு கோருவேன்.மானநஸ்ட வழக்கு ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. வழக்குத் தாக்கல் செய்தால் நாமல் ராஜபக்ஷவிடம் சட்டக்கல்லூரி, தாஜுதீன், லசந்த,ஹெக்னெலிகொட , ஜூலம்பிட்டியே அமரே உள்ளிட்ட பல விடயங்களை குறுக்கு கேள்வியாக கேட்பேன் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டி.வி. சானக அவரது தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எனக்கு கேள்வி கோரல் பத்திரம் அனுப்பி வைத்துள்ளதாக சபையில் குறிப்பிட்டார். சமூக ஊடகங்கள் பக்கம் சென்றால் கேள்வி கோரல் பத்திரம் பரிமாற்றப்படுகிறது.ஆனால் எனக்கு உத்தியோகபூர்வமாக எவ்வித பத்திரமும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.
நாமல் ராஜபக்ஷ எனக்கு எதிரான மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அவர் நீதிமன்றத்தில் பயிற்சிப் பெறாத காரணத்தால் மானநஸ்ட வழக்கின் தன்மையை அறிந்திருக்கவில்லை. மானநஸ்ட வழக்கின் போது முறைப்பாட்டாளரிடம் பிரதிவாதி எந்த கேள்விகளையும், கேட்கலாம்.ஏனைய வழக்குகள் இவ்வாறான தன்மை கிடையாது.
குறிப்பாக முறைப்பாட்டாளர்கள் கண்ணாடி அறையில் இருக்க கூடாது.கண்ணாடி அறையில் இருக்கும் நபர் என்னிடம் பில்லியன் கணக்கான நிதி கோடி கேள்வி கோரல் பத்திரத்தை அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த வழக்கில் ஒழுக்கம் பிரதான ஒரு அம்சமாக கருதப்படும். அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்பவரின் ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படும்.
முறைப்பாட்டாளரின் ஒழுக்கம் தூய்மையானதாக இருத்தல் வேண்டும். கேள்வி பத்திரத்தில் முறைப்பாட்டாளர் இங்கிலாந்து சிடி பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. முறைப்பாட்டாளர் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் அவரிடம் பல குறுக்குக் கேள்விகளை கேட்பேன்.இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் அவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
நாமல் ராஜபக்ஷ எனக்கு எதிரான மானநஸ்ட வழக்குத் தாக்கல் செய்ததன் பின்னர் நான் அவரிடம் ‘ சட்டக்கல்லூரி பட்டக்கல்வியை தொடர்வதற்கு குறைந்தப்பட்ச தகைமையை பூர்த்தி செய்துள்ளீர்களா, இங்கிலாந்து சிடி பல்கலைக்கழகத்தின் சட்ட பட்டம் உண்மையானதா, சட்டக்கல்லூரியின் இறுதியாண்டு பரீட்சையை தனியறையில் இருந்து எழுதினீர்களா, தாஜுதீன்,லசந்த, ஹெக்னெலிகொட ஆகிய படுகொலைகளுக்கு தாங்கள் உட்பட தங்களின் குடும்பம் தொடர்புப்பட்டுள்ளதா, ஜூலம்பிட்டியே அமரே தங்களின் (நாமல் ராஜபக்ஷவின்) மெய்பாதுகாவலரா, நிமல் லன்சா என்பவரை விசேட அதிரடிப்படையினர் பின்தொடர்ந்து வரும் போது தங்களின் தந்தை அவரை பாதுகாப்பதற்கு கட்டிப்பிடித்துக் கொண்டாரா, ‘ என்ற குறுக்கு கேள்விகளை நான் நிச்சயம் கேட்பேன்.
14 நாட்களுக்குள் நாமல் ராஜபக்ஷ எனக்கு எதிராக மானநஸ்ட வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்து நட்டஈடு கோருவேன்.தயாராகவே இருங்கள் என்றார்.

