மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க இருக்கிறது. அதற்கான அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும். தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி, தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
குருக்கல் மடம் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனத்தை செலுத்தியுள்ளது. இதுதொடர்பான வழங்கு 2014 ஆம் ஆண்டு இதுதொடர்பான வழக்கு ஆரம்பிக்கப்பட்டது.
அந்த காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பான அலுவகம் இருக்கவில்லை. என்றாலும் இந்த விடயத்தை மீண்டும் வெளியில் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்வதேச மரபுரிமைக்கமைய இந்த அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறும். தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவிகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதி அமைச்சிடம் போதிய நிதி உள்ளதால் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட நிபுணர்களின் மதிப்பீட்டுக்கு இணங்க நிதியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட நடைமுறைகளுக்கு இணங்க வெளிப்படைத்தன்மையுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதற்கான நடவடிக்கைகளில் இழப்பீட்டு அலுவலகம் மற்றும் காணாமற் போனோர் அலுவலகம் காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்ளும். அதற்காக தேவைப்படும் அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் ஒரு போதும் பின்னிற்காது.
கைகள் படாத வகையில் பாரிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிபுணர்கள் கூறும் எத்தகைய உபகரணங்களையும் பயன்படுத்தி அந்த உடலங்கள் அகழப்பட்டு உரிய சமூகத்தின் முறைப்படி இறுதிக்கிரியைகளை கௌரவத்துடன் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் மதத்தலைவர்களை கௌரவிக்கும் வகையில் மத அனுஷ்டானங்களுக்கு இணங்க அந்த இறுதிக் கிரியைகள் நடத்தப்படும். மேற்படி நடவடிக்கைகளில் இரகசியத் தன்மைகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படுவதுடன் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இந்த நடவடிக்கைகள் நீதி நியாயம் பின்பற்றப்பட்டு மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். நடைமுறையில் உள்ள சட்டத்தை பின்பற்றி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் இக்காலங்களில் மழை பெய்யக் கூடாது என்று நாம் பிரார்த்தித்துக் கொள்வோம் என்றார்.

