மாரவில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

40 0

புத்தளத்தில் மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் ஜூலை 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மாரவில பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (08)கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாரவில , நாத்தாண்டிய பிரதேசத்திற்கு ஜூலை 22 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர்,  தனது மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த வசந்தி சத்துராணி என்ற 30 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் 10 வயதுடைய மகன் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர்  மாதம்பே இரட்டைகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.