மலையக அபிவிருத்தி அதிகார சபை அல்லது பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை குறித்து இன்று மாபெரும் சர்ச்சை எழும்பியுள்ளது. இந்த அபிவிருத்தி அதிகார சபையானது நீர்த்துப்போக செய்து அதை பெருந்தோட்ட சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் ஒரு பகுதியாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இதுகுறித்து மலையக சமூகம், புத்திஜீவிகள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் மேற்படி மலையக அபிவிருத்தி அதிகார சபையை தொடர்ந்து செயல்பாட்டிலுள்ள அதிகார சபையாக கொண்டு செல்ல வேண்டும் என்று அதற்கான நடவடிக்கைகளை ஆவண செய்யுமாறும் ஜனாதிபதியின் கவனத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்பாட்டு குழு உறுப்பினரும் பெருந்தோட்ட சமூக உட் கட்டமைப்பு பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கலாநிதி பிபி சிவப்பிரகாசம் தெரிவிக்கின்றார்.
மேலும் இவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்கு சமர்பித்துள்ள ஆவணத்தில் கலாநிதி சிவப்பிரகாசம், மேற்படி அபிவிருத்தி அதிகார சபை சட்டரீதியாக 2018 ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக நிறுவப்பட்ட ஒரு அதிகார சபை ஆகும்.
ஆனால் அதற்குப் பிற்பட்ட காலங்களில் ஆட்சிக்கு வந்த குறிப்பாக 2020 முதல் 2024 வரை ஆட்சி செய்த அரசாங்கம் இந்த அதிகார சபையை பயன் படுத்தவில்லை. வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டையோ அல்லது செயற்பாட்டிற்கான ஆளணியினரையோ, அல்லது செயல் திட்டங்களையோ சரியான முறையில் செயல்படுத்தவில்லை. எனவும் அதேபோல் இதற்கான சரியான தலைமைத்துவம் உருவாக்கப் படாமையினாலும் இந்த பின்னணியில் மலையக அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்து பலவீனப்படுத்தப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடதக்கது எனவே இது கடந்த அரசாங்கங்களினுடைய குறைபாடுகளே ஆகும். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் மலையக மக்களின் அபிவிருத்தி குறித்து மேற்படி நிறுவனம் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
மலையக அபிவிருத்தி அதிகார சபையை குறிப்பிட்ட அந்த பெயர் பட்டியலில் இருந்து நீக்கி, மீளவும் திறம்பட செயல்பட உள்ள ஒரு நிறுவனமாக மாற்றி அமைப்பதற்கு, அமைச்சரவை பத்திரத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கும் ஆவன செய்ய ஆலோசனை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

