சர்வாதிகார ஒரு கட்சி ஆட்சி முறைமையை நோக்கி நகரும் தேசிய மக்கள் சக்தி

86 0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஒரு கட்சி ஆட்சி முறைமையை நோக்கியே நகர்கின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூக வலைத்தள மற்றும் அரசியல் செயற்பாட்hளர்களான மிலிந்த ராஜபக்ஷ மற்றும் எராஜ்ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை மற்றும் முன்னிலை சோசலிச கட்சி அலுவலகத்திலிருந்தோர் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் மௌனம் இதற்கு சிறந்த உதாரணமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில்  சனிக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஒரு கட்சி ஆட்சி முறைமையை நோக்கியே நகர்கின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதன் பிரதிபலனாகவே மிலிந்த ராஜபக்ஷ மற்றும் எராஜ் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதேபோன்று முன்னிலை சோசலிச கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வாறிருக்கையில் தற்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அடக்குமுறைகளும் ஆரம்பித்துள்ளன. அந்த வகையிலேயே ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உருமய தலைவருமான உதய கம்மன்பிலவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு நாம் கடும் எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்ற தினத்தில் சட்டம் பயிலும் மாணவர்கள், மதத் தலைவர்களுக்கு கூட உள்நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நீதிமன்ற பதிவாளரிடம் வினவிய போது அவ்வாறு எந்தவொரு வரையறைகளும் நீதிமன்றத்தால் விதிக்கப்படவில்லை எனக் கூறினார். நிமல் லன்சாவை பார்க்க சிறைச்சாலை சென்ற அவரது சட்டத்தரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதற்காக காரணத்தை கேட்ட போது சட்டத்தரணிகள் அரசியல் ரீதியான கருத்துக்களை கூறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் பொலிஸாருக்கோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ தேவையற்ற விடயமாகும். இதே நிலைமை தொடர்ந்தால் சிறிது காலத்தின் பின்னர் நீதிமன்றத்தை மூடி, சட்டத்தரணிகளின் செயற்பாடுகளை வரையறுத்து ஒரு கட்சி ஆட்சி முறைக்குச் சென்று விடுவர்.

மறுபுறம் வியத்புர திட்டத்தின் கீழ் வீடுகளைக் கொள்வனவு செய்தவர்களுக்கான சலுகைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 210 இலட்சம் பெறுமதியான வீட்டுக்கு இறுதியில் 310 இலட்சம் செலுத்துகின்றோம். இதில் எமக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் மறைப்பதற்காக இவ்வாறு மக்களின் கவனத்தை எதிர்க்கட்சியினர் மீது திருப்புகின்றனர்.

இவற்றை நாம் நீதிமன்றத்தின் ஊடாக சவாலுக்குட்படுத்துவோம். 33 அரச நிறுவனங்கள் மூடப்படுவதை மறைப்பதற்காக இந்த விடயத்தை பரபரப்பாக வெளியிட்டுள்ளனர். இன்று பொய்கள் பரவலாக சமூகமயப்படுத்தப்பட்டு கீழ் மட்டத்தில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 5.3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்துடன் எமது ஆட்சியில் நாட்டைக் கையளித்தோம். அது இன்று 4.8 சதவீதத்தை விட வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.