எமது கட்சி காரியாலயம் மீது தாக்குதல் நடத்த மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழுவே தீர்மானம் எடுத்தது. இந்த மத்திய செயற்குழுவே நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அரசியல் தீர்மானங்களையும் எடுக்கிறது. அதனாலே அரசாங்கத்தின் இந்த மாேசமான செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என தெரிவிக்கிறோம் என முன்னிலை சோசலிச கட்சி மத்திய செயற்குழு உறுப்பினர் சுஜித் குறுவிட்ட தெரிவித்தார்.
நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிச கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கம்பஹாவில் அமைந்துள்ள எமது கட்சி காரியாலயத்தின் மீீது தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றிக்கொள்ள வேண்டிய தேவை உண்மையிலேயே அரசாங்கத்துக்கு இல்லை.
மாறாக இந்த தாக்குதலில் அரசாங்கம் எமக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அதாவது, நீங்கள் எங்களுக்கு எதிராக செயற்பட்டால், இவ்வாறுதான் நாங்கள் உங்களை அடக்குவோம் என்ற செய்திையையே வழங்கி இருக்கிறது.
நீதிமன்ற அதிகாரம், பொலிஸ் அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்த தற்போது ரில்வின் சில்வா ஆரம்பித்திருக்கிறார். மக்கள் விடுதலை முன்னணி இந்த வழியில்தான் முன்னுக்கு செல்வதாக இருந்தால் அது பாரதூரமான நிலைமையாகும்.
வாக்களித்த மக்களின் அபிலாசைகளுக்கு எதிராகவே அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் வீழ்ச்சியடைந்த பொருளாதார நிபந்தனைகளை மேற்கொள்ளல், இலங்கையின் காணிகளை இந்தியாவுக்கு வழங்கல், அரச நிறுவனங்களை துண்டாக்கி விற்பனை செய்தல், போன்ற விடயங்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது.
ஆனால் மக்களின் எதிர்ப்புடன் இவற்றை மேற்கொள்ள முடியாது. அதனால் அடக்குமுறை மற்றும் குண்டர்களின் பலத்தை பயன்படுத்திக்கொண்டு மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர்.
என்றாலும் நாங்கள் முன்னிலை சோசலிச கட்சியாக நாட்டு மக்களுடன் இணைந்து, இந்த அடக்குமுறைக்கு எதிராக போராடுவோம். அரசியல் செய்யும் உரிமை எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.
அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து, இந்த வீழ்ச்சியடையும் கொள்கையை கண்களை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க நாங்கள் தயார் இல்லை. ஏனெனில் எமது கட்சி காரியாலயம் மீது தாக்குதல் நடத்த மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழுவே தீர்மானம் எடுத்தது.
இந்த மத்திய செயற்குழுவில் ரில்வின் சில்வா, அநுர திஸாநாயக்க,விஜித்த ஹேரத், பிமல் ரத்நாயக்க ஆகியோர் அமருகின்றனர். இந்த மத்திய செயற்குழுவே நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அரசியல் தீர்மானங்களை எடுக்கிறது. அதனாலே அரசாங்கத்தின் இந்த மாேசமான செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் என கூறுகிறோம் என்றார்.

