பேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட பல சமூக ஊடகத்தளங்களுக்கு நேபாளத்தில் தடை!

54 0

நேபாள அரசாங்கம், ஃபேஸ்புக், எக்ஸ் (X) மற்றும் யூடியூப் உள்ளிட்ட பல சமூக ஊடகத் தளங்களை அந்நாட்டில் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.

அரசின் பதிவு விதிமுறைகளுக்கு இணங்காததே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இணையத்தில் பரவும் வெறுப்புப் பேச்சு, வதந்திகள் மற்றும் இணையக் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேபாள அரசு கூறியுள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கஜேந்திர குமார் தாக்கூர் இதுகுறித்து கூறுகையில்,

“பதிவு செய்யப்படாத சமூக ஊடகத் தளங்கள் இன்று முதல் முடக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அமைச்சில் சமூக ஊடகத்தளங்கள் தங்களைப் பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு குறைகளைத் தீர்க்கும் அதிகாரி, மற்றும் சுய-ஒழுங்குமுறைக்கு பொறுப்பான ஒரு நபரை நியமிக்க வேண்டும் என்று புதன்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களை நிர்வகிக்கும் மெட்டா, யூடியூப் நிறுவனமான ஆல்பாபெட், எக்ஸ், ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் போன்ற நிறுவனங்கள் இந்த விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் கூறுகையில், “பதிவு செய்ய அவர்களுக்குப் போதுமான நேரம் கொடுத்தோம், மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் இதைப் புறக்கணித்ததால், நேபாளத்தில் அந்த சமூக ஊடகதளங்களின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றார்.

தற்போது, வைபர், வீடாக், டிக்டாக், நிம்பஸ் மற்றும் போப்போ லைவ் போன்ற ஐந்து தளங்கள் மட்டுமே நேபாளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெலிகிராம் மற்றும் குளோபல் டயரி ஆகிய இரண்டு தளங்கள் பதிவு செய்யும் பணியில் உள்ளன. இந்த ஏழு தளங்களைத் தவிர, ஏனைய சமூக ஊடகத் தளங்களை முடக்க, நேபாள தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு (NTA) அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மெட்டா மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்குப் பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டும் அவை பதிலளிக்கவில்லை என்று நேபாள அரசு கூறியுள்ளது.

எனினும், பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் உடனடியாகச் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைக்கு எதிராக, இது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாக டிஜிட்டல் உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், இந்த நடவடிக்கை அரசின் அடக்குமுறையை வெளிப்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.