தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் – சம்பிக்க ரணவக்க

127 0

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலான கலந்துரையாடலின்போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் அம்மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியே அரசியல் செய்தார்கள். செல்வநாயகம் மற்றும் பொன்னம்பலம் போன்றவர்கள் வாராந்த அரசியலில் ஈடுபட்டார்கள். வடக்குக்கு சென்று ஒன்றை குறிப்பிட்டுவிட்டு கொழும்புக்கு வந்து பிறிதொன்றை குறிப்பிட்டார்கள்.

30 வருடகால யுத்தம் நாட்டில் இழப்புக்களையும் வேதனைகளையும் மாத்திரமே மிகுதியாக்கின. வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இன்றும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்குக்கான அபிவிருத்திகளை அரசாங்கம் விரிவுப்படுத்த வேண்டும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டும். பிரதி சபாநாயகராக முஸ்லிம் பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்டமை வரவேற்கக்கத்தது. சிறந்த முற்போக்கான தீர்மானங்களுக்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.