அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றிணையுமாறு அழைப்பு – துமிந்த நாகமுவ

77 0

எமது கட்சி காரியாலயத்தை பலவந்தமாக அபகரித்துள்ளதன் மூலம் அரசாங்கம் தனியாருக்கு உரித்தான உடமை ஒன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து அந்த உடமைகளை பலவந்தமாக கைப்பற்றும் நடவடிக்கை ஒன்றையே செய்திருக்கிறது. அரசாங்கத்தின் இவ்வாறான தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு அனைவரையும் அழைக்கிறோம் என முன்னிலை சோசலி கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

முன்னிலை சோசலிச கட்சியின் கம்பஹா மாவட்ட பிரதான கட்சி காரியாலயத்தின் மீது செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வியாழக்கிழமை (4) பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில்,

கடந்த செவ்வாய்க்கிழமை கம்பஹா யக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள எமது கட்சி காரியாலத்திற்கு பலவந்தமாக நுழைந்த அரசாங்கத்தின் குண்டர்கள் குழு, காரியாலயத்தில் தங்கி இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்த இடத்தை கைப்பற்றி இருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியின் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிகள் குழுவொன்று இந்த தாக்குதலில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அதனால் இதுதொடர்பான சில தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள பொலிஸ்மா அதிபர் காரியாலயத்துக்கு வந்தோம்.

ஏனெனில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று குறுகிய நேரத்துக்குள் பெருந்திரளான பொலிஸார் அந்த இடத்துக்கு வந்திருந்தனர். அப்படியானால் இந்த பொலிஸாரை இந்த இடத்துக்கு யார் அழைத்தார்கள் என்று நாஙகள் கேட்கிறோம். அதேநேரம் அங்குவந்த பொலிஸார் செயற்பட்ட விதம் கேள்விக்குறியாம். விசேட அதிரடிப்படை பஸ் வண்டி ஒன்றும் வந்திருந்தது. இவ்ளவு பெரிய நடவடிக்கை ஒன்றை சில மணி நேரத்துக்குள் மேற்கொள்ள பொலிஸாருக்கு எங்கிருந்து கட்டளை வந்தது? என கேள்விகள் எங்களிடம் இருக்கின்றன.

எமது இந்த கட்சி காரியாலயத்தில் புத்தகங்கள், மடிக்கணணிகள் மற்றும் கட்சிக்கு சொந்தமான பொருட்கள் பாரியளவில் இருந்தன.இந்த பொருட்களை நாங்கள் பெற்றுக்கொள்ள பொலிிஸாரிடம் கேட்டபோது அதற்கு இடமளிக்க முடியாது என்றார்கள்.இது இரண்டு கட்சிகளுக்கிடையிலான பிரச்சினை, அதனால் பொலிஸாருக்கு இதில் தலையிட முடியாது என்றே அவர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

அனால் இந்த நடவடிக்கைக்கு அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிரடிப்படை உள்ளிட்ட பாரியளவிலான பொலிஸார் வந்தார்கள். வீதித்தடைகள் கொண்டுவந்திருந்தனர். அப்படியானால் இதற்கு பணம் எங்கிருந்து? இது அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் இல்லையா? அதனால்தான் இதுதொடர்பான தகவல்களை வழங்குமாறு கோரி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை கையளித்திருக்கிறோம். 14 நாட்களுக்கு இதுதொடர்பான தகவல்களை எங்களுக்கு பெற்றுத்தரும் என நாங்கள் நம்புகிறோம்.

அத்துடன் தனியாருக்கு உரித்தான உடமை ஒன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து அந்த உடமைகளை பலவந்தமாக கைப்பற்றும் நடவடிக்கை ஒன்றையே அரசாங்கம் செய்திருக்கிறது. இவ்வாறான மோசமான நடவடிக்கைகளுக்கு மக்கள் இடமளிக்கக்கூடாது. இந்த அரசாங்கம் தற்போது அதிகார மொத்திலே இருக்கிறது.

அதனால் அவர்கள் நினைத்ததை செய்கிறார்கள். சட்டத்தை துஷ்பியோகம் செய்வது மாத்திரமின்றி, மக்களின் உடமைகளையும் அபகரிக்கின்றனர். இவ்வாறே மூதூர், மன்னார் போன்ற பிரதேசங்களில் மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டு இந்தியாவுக்கு விற்பனை செய்ய பார்க்கிறது. இதற்கு இடமளிக்கக்கூடாது. அதனால் அரசாங்கத்தின் இவ்வாறான தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு அனைவரையும் அழைக்கிறோம் என்றார்.