ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய போட்டியாளர்கள்

70 0

சீனாவில் நடைபெறவுள்ள 23 வது ஆசிய, கேடட், ஜூனியர்  கராத்தே சாம்பியன்ஷிப்பில் ( 23rd Asian , Cadet , Junior @ U21 Karate Championship ) இலங்கை கராத்தே கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இருந்த  31 போட்டியாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து விசாக்கள் இல்லாததால் செவ்வாய்க்கிழமை (02)  மாலை  வீடு திரும்பியுள்ளனர்.

இந்தப் போட்டி ஆசிய நாடுகளில் உள்ள  விளையாட்டு வீரர்களுக்கிடையில் வௌ்ளிக்கிழமை (05) முதல் ஞாயிற்றுக்கிழமை (07)  வரை சீனாவின் ஷாகுவானில் நடைபெற உள்ளது.

இலங்கை கராத்தே தோ கூட்டமைப்பால் ,  இலங்கை முழுவதும் உள்ள அதன் இணைக்கப்பட்ட கிளைகளில் இருந்து 31 விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து, ஒன்றரை மாத பயிற்சிக்குப் பின்னர் இந்தப் போட்டிக்காக சீனாவுக்குச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இந்தக் குழுவில் பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள் இருந்ததுடன்  அவர்கள் சீனாவுக்குச் சென்று வருவதற்கான விமானக் கட்டணம், சீனாவில் ஹோட்டல் தங்குமிடம் மற்றும் சீனாவில் போக்குவரத்துச் செலவுகளுக்காக   580,000 ரூபாய் செலவிட்டிருந்தனர்.

விமான டிக்கெட்டுகளை வழங்கி, செவ்வாய்க்கிழமை (02)  அன்று பிற்பகல் 2:00 மணிக்கு சீனாவுக்குப் புறப்படவிருந்த இலங்கை ஏர்லைன்ஸ் UL-880 விமானத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறு கராத்தே டோ கூட்டமைப்பு , இந்த வீரர்களுக்கு தெரிவித்திருந்தது.

அதன்படி, விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு, அதாவது காலை 11.00 மணிக்கு வீரர்கள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போதும், வீரர்களுக்கு தேவையான விசாக்களுடன்  கராத்தே கூட்டமைப்பின் எந்த ஒரு அதிகாரியும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவில்லை தெரிவிக்கப்படுகிறது.

எனவே, விளையாட்டு வீரர்கள் பிற்பகல் 3.00 மணி வரை விமான நிலையத்தில் புறப்படும் முனையத்திற்கு வெளியே காத்திருந்து, பின்னர் வெறுங்கையுடன் ஆயிரக்கணக்கான பணத்தை செலவிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக  கருத்து தெரிவித்த பல வீரர்கள், தங்களின் பெற்றோர் பண்ணைகளை அடமானம் வைத்து, கடன் வாங்கி இந்தப் போட்டிக்கு  செல்ல பணம் வழங்கியதாக தெரிவித்தனர்.