இலங்கைக்குச் சொந்தமான இடத்தில் ஓர் அங்குலத்தைக் கூட நாம் விட்டுக் கொடுக்கமாட்டோம் என கச்சத்தீவு விடயம் தொடர்பாக விவசாய, கமநல சேவைகள் நீர்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
கண்டி செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தென்னிந்திய அரசியல்வாதிகள் அரசியல் இலாபத்திற்காக ஒரு சில கருத்துக்களை வெளியிடமுடியும். அதில் ஒன்றுதான் கச்சத்தீவு தொடர்பான கருத்துக்கள்.
கச்சத்தீவு இலங்கைக்குரியது. அதனை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டு வாக்காளர்களை உசார்ப்படுத்த அல்லது குஷிப்படுத்த அவர்கள் கூறும் கதைகளுக்கு நாம் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை.
நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்வதென்றால் ஆதாரத்துடன் தாக்கல் செய்ய வேண்டும். அதனை உரிய துறையினர் தேடிக் கண்டுபிடித்து ஆதாரத்துடன் நீதிமன்றில் சமர்பிப்பர். அதேநேரம் பாரிய களவுகள், முறைகேடுகள் பல நடந்திருக்கலாம். அவற்றை உறுதிப்படுத்தும் சான்றுகள் அல்லது சாட்சியங்கள் முறையாகக் கிடைக்கும் வரை வழக்குத்தாக்கல் தாமதிக்கலாம்.
சில விடயங்கள் ஒப்பீட்டளவில் சிறிய மோசடிகளாக இருந்தாலும் சாட்சியங்கள் முறையாகக் கிடைத்தால் அவற்றை சட்ட மாஅதிபர் திணைக்களம் உடன் தாக்கல் செய்யும்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் வழக்கும் அவ்வாறே. அதற்கான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவன்றி அரசியல் குரோதம் என்று கூற முடியாது என்றார்.

