இராணுவ அணிவகுப்பில் பங்கேற்கும் புட்டின், கிம் ஜாங் உன்

64 0

மேற்குலக அழுத்தங்களுக்கு மத்தியில், கூட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் பீஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள உள்ளனர்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ரஷ்யா் மற்றும் வட கொரியா ஆகிய இரு நாட்டுத்தலைவர்களும் ஒன்றாகப் பொதுவெளியில் தோன்றும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ரொபர்ட் ஃபிகோவைத் தவிர்ந்த,  அடுத்த வாரம் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் 26 வெளிநாட்டு அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களில் எந்த மேற்கத்திய தலைவர்களும் இடம்பெறமாட்டார்கள் என சீன வெளிவிவகார அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறும் “வெற்றி நாள்” அணிவகுப்பின் போது, சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ வலிமையின் பின்னணியில், இந்த மூன்று தலைவர்களும், சீனா மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமையை மட்டுமல்லாமல், தடைகளால் பாதிக்கப்பட்ட ரஷ்யா மற்றும் வட கொரியாவுடனான தங்கள் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துவார்கள்.

பீஜிங்கின் ஒரு மூலோபாய பங்காளியாகக் கருதப்படும் ரஷ்யா, 2022 இல் உக்ரேன் மீதான அதன் படையெடுப்பிற்குப் பின்னர் விதிக்கப்பட்ட பல சுற்று மேற்குலகத் தடைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்லும் விளிம்பில் உள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் புட்டின், கடைசியாக 2024 இல் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார்.

சீனாவின் உத்தியோகபூர்வ ஒப்பந்தக் கூட்டாளியான வட கொரியா, அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கியதன் காரணமாக 2006 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தடைகளின் கீழ் உள்ளது. கிம் கடைசியாக ஜனவரி 2019 இல் சீனாவிற்கு விஜயம் செய்தார்.

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசாஷ்கியான், இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ மற்றும் தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற சபாநாயகர் வூ வான்-ஷிக் ஆகியோர் இந்த அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள் என சீன துணை வெளியுறவு அமைச்சர் ஹாங் லெய் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கும் இந்த அணிவகுப்பில் பங்கேற்பார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அதன் துணைப் பொதுச் செயலாளர் லி ஜுன்ஹுவா கலந்துகொள்கிறார். இவர் இதற்கு முன்னர் சீன வெளியுறவு அமைச்சகத்தில் இத்தாலி, சான் மரினோ மற்றும் மியான்மருக்கான சீனத் தூதர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அந்நாளில், தியனன்மென் சதுக்கத்தில் ஜனாதிபதி ஜி ஜின்பிங், வெளிநாட்டுப் பிரமுகர்கள் மற்றும் சீனாவின் மூத்த தலைவர்களுடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான துருப்புக்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்.

மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த அணிவகுப்பு, சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் மிகப்பெரிய அணிவகுப்புகளில் ஒன்றாக அமையவுள்ளது. இதில் போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் போன்ற அதிநவீன உபகரணங்கள் காட்சிப்படுத்தப்படும்.