முத்துநகர் விவசாயிகள் ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு !

60 0

திருகோணமலை சீனக்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முத்துநகர் விவசாயிகள் 5 பேரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருகோணமலை முத்துநகர் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிசாரினால் நேற்றைய தினம் (27) முத்துநகர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் சந்தேகத்தின்பேரில் கைது சைய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேக நபர்களை இன்றையதினம் (28) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது  ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன் மிகுதி 5 பேரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முத்துநகர் விவசாயிகள் விவசாயம் செய்து வந்த காணியில் இந்திய சோலார் நிறுவனம் ஒன்றினால் வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தத நிலையிலேயே குறித்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் ஊழியர்கள் மற்றும் சோலார் நிறுவத்தினுடைய ஊழியர்கள் இருந்ததாகவும் தெரிய வருகின்றது.

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் நிலையத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற விவசாயிகள் 3 பேரும் வீட்டில் இருந்த 3 பேருமே பொலிசாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டு இன்று (28) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

முத்துநகர் விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த காணிகளில் சிலர் கனரக வாகனங்களைக் கொண்டு அத்துமீறி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிந்த விவசாயிகள் அங்கு சென்று அங்கிருந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த விவசாயிகள் சிலர் சீனக்குடா பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காக மதியத்தில் இருந்து மாலை வரை காத்திருந்தபோதும் பொலிஸார் முறைப்பாட்டை பெற்றுக் கொள்ளாமல் விவசாயிகளை கைது செய்துள்ளதாகவும், இந்நிலையில் விவசாயி ஒருவர் காயமடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை மற்றைய தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவரும் காயமடைநடத நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முத்துநகர் விவசாயிகள் நீண்டகாலமாக விவசாயம் மேற்கொண்டு வந்த காணிகளில் இருந்து சில விவசாயிகள் அண்மையில் நீதிமன்றத்தின் மூலம் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இருப்பினும் ஏனைய காணிகளில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிக்கை வெளியிட்டிருந்ததாகவும் ஆனால் ஏனைய காணிகளும் இந்திய நிறுவனத்திற்கு சூரிய சக்தி மின் திட்டத்திற்காக வழங்கப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருவதாகவும் விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.