தமிழினத்தின் ஆயுத எதிர்பற்ற சூழலைத் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி வேகமாகத் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையைச் செய்தவாறு கடந்த பதினாறு ஆண்டுகளாக ஆட்சியை நடாத்திய அரசுகள் தொடர்ந்து சிங்கள இனவாத அரசுகளாகவே செயற்பட்டு வருகின்றமை ஒன்றும் புதிரல்ல. எவ்வளவு விரைந்து சிங்கள பௌத்த மயமாக்கலைச் செய்யமுடியுமோ அவளவு விரைவாகச் செய்து சிங்கள பௌத்த தேசமாக மாற்றுதல் என்ற முனைப்போடு இலங்கையின் அரசுப் பொறிமுறை தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. நாம் வந்தால் இலங்கைத்தீவெங்கும் சமாந்தராமாக ஆட்சியதிகாரத்தை நடைமுறைப்படுத்துவோம். அனைவரையும் இலங்கையராகச் சமத்துவமாக நடாத்துவோம் என்றவாறு மக்கள் விடுதலை முன்னணியின் மறுஅவதாரமாக வந்த தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று எதிர்வரும் 23.09.2025ஆம் நாளுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. ஆட்சியைக் கைப்பற்றி 11மாதங்கள் நிறைவுற்ற வேளையில் தமிழினத்திற்காக இந்த அரசு எதையாவது செய்ததா(?) என்று கேட்பதானது இலங்கைத்தீவின் சிங்கள இனவாத அரசுகளின் சிந்தனைப் போக்கைப் புரியாதோரின் வினவுதலாகவே இருக்கமுடியும்.
இனவாதக் கோட்பாட்டை அடிநாதமாகக் கொண்டியங்கியங்கும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியற் சிந்தாந்தப் பட்டறையில் உருவாகிய அனுர குமார திஸ்ஸநாயக்க தலைமையிலான அரசு உண்மையில் தமிழ் மக்களின் ஒருசாராரும், உலகின் அதிகார சக்திகளும் சுட்டுவதுபோல் இலங்கைத்தீவின் புதிய அரசியல் சித்தாந்த முகமா? அப்படிப் புதிய அரசியல் சித்தாந்தம் கொண்ட முகமென்றால், ஏன் இன்றும் தொடரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகளைக் கண்டும் காணததுபோல் அரசுத் தலைவரான அனுர அனுமதித்திருக்கின்றார். இந்த நிலையில் இன்னுமொரு விடயமும் நோக்குதற்குரியது. அனுர தலைமையிலான கட்சியிலிருந்து நாடாளுமன்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்து அனுப்பிவைத்த தமிழர்நிலையே பரிதாபத்திற்குரியதாகிறது. ஏனென்றால், நாடாளுமன்றில் தமிழர் தரப்புக் குரலாக ஒலிக்கும் தமிழ்த் தேசியம் சார்ந்த குரல்களைக்கூடத் தடுத்தாடுபவர்களாகவே வடக்கிலிருந்து தெரிவான அனுர அணியைச் சேர்ந்தவர்கள் செயற்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் காணிகளை அத்துமீறி ஆக்கிரமித்து நிறுவப்பட்டுள்ள தையிட்டி பௌத்தவிகாரை முதல் மயிலந்தனை மேய்ச்சல் நில அபகரிப்புவரை தீர்வின்றித் தொடர்கின்றன. அதேவேளை செம்மணிப்புதைகுழி தமிழினப் படுகொலையின் சாட்சியமாக வெளிவந்துள்ளது. அங்கே சிங்களப் படைகளால் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்திப் படுகொலை செய்வோரைப் புதைத்த சிங்களப் படையினன் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் சாட்சியத்திற்கமைய அப்போது கொல்லப்பட்டோர் தற்போது எலும்புக்கூடுகளாகக் வெளிவரும் சூழலிற்கூட அதனைக் குறித்து பேசவோ அல்லது நடைபெற்ற தமிழினப் படுகொலையின் சாட்சியமாக உள்ள செம்மணிப் புதைகுழியிலே மீட்கப்படும் கொல்லப்பட்ட மக்கள் குறித்து நாடாளுமன்றில் ஒரு விவகாரமாக முன்கொண்டு செல்லவோ தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் முன்வந்தார்களா?
அரசுத் தலைவரான அனுர தமிழினத்தை நோக்கி இலங்கைத்தீவு, நாம் இலங்கையர் போன்ற சொல்லாடல்களை வெறும் வெற்றுப் பேச்சாக இல்லாது அர்தமுள்ளதாக மாற்றியமைக்கும் சிந்தனை இருந்தால் வெலிக்கடைப் படுகொலை முதல் பல்வேறு படுகொலையின் பங்காளியான ரணிலின் மீதான நீதிமன்ற நடவடிக்கையில் இந்தக் குற்றங்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுத் தனது அரசானது ஒரு பாரபட்சமற்ற அரசென்பதை நிறுவுவாரா?
ஊழலுக்கெதிரான அரசு என்றும் தனது அரசு யாரையும் தகைமைகொண்டு நோக்காது என்றும் உலகுக்கு அறிவிக்கும் நோக்கிலே முன்னாள் அரசுத் தலைவரான ரணில் விக்ரமசிங்கவின் கைது நடவடிக்கையை நோக்கலாம். ஊழலோடு இலங்கைத்தீவில் புரையோடிப்போயுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அரசு, குறிப்பாக இலங்கைத்தீவின் முதன்மைப் பிரச்சினையாகவுள்ள இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டைத் நெருங்கி நிற்கும் இவ்வேளைவரை ஏதாவது கூறியுள்ளாரா? ஐ.நா மனித உரிமை அவை கூடவுள்ள தருணத்தில் மேற்குக்குச் சார்பான ஒரு பெரும் தலையொன்றைக் கைது செய்ததன் ஊடாக இனப்படுகொலை அரசுகளென்ற தோற்றப்பாட்டை மாற்றியமைத்து சிங்கள சிறிலங்கா அரசின் பொறுப்புக்கூறலைத் திசைதிருப்ப முனைகின்றாரா?
செம்மணிப் புதைகுழி குறித்து எதையும் கூறாத நோர்வேயைச் சேர்ந்த முன்னாள் சமாதானத் தூதுவரான எரிக் சொல்கெய்ம் ரணிலின் கைது குறித்துப் பேசுகிறார். ரணிலின் ஆலோசகராகவும் செயற்பட்ட ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையின் இனப்படுகொலையாளர்களில் ஒருவரான ரணிலுக்காகச் சிங்களத்தைப் பாதுகாத்து நிற்கும் பச்சோந்திகளான தமிழ் அரசியல்வாதிகளும் குரல்கொடுப்பதைக் கொடுமையென்பதா அல்லது மடமையென்பதா?
போரற்ற சூழலில் தமிழினவழிப்பு எங்கே நடைபெறுகிறது என்று வினாவெழுப்பிச் சிங்களத்தின் அரசறிவியலாளர், படைத்துறைசார் ஆய்வாளர் போன்றோர் கடந்த பதினாறு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளைச் சிதைக்கும் நோக்கிலான பரப்புரையைத் தங்கள் எழுத்தாலும் உரைகளாலும் உள்ளக மற்றும் வெளிய மட்டத்தில் மேற்கொண்டுவருகின்றமை அனைவரும் அறிந்ததே. இது குறித்துத் தடுத்தாடவேண்டிய தமிழர் தரப்பின் புலமைசார் குமூகமாகட்டும் ஊடகங்களாகட்டும் சிங்கள அரசினதும் அரசியல்வாதிளினதும் பங்காளிச் சண்டைகளுக்குக் கொடுக்கும் முதன்மையும் விளத்தங்களும் வியாக்கியானங்களும் ஆய்வுகளும் தமிழினத்தின் இருப்புக்கும் விடுதலைக்கும் அவசியமானதா என்ற வினா எழுவது இயல்பானதே.
நன்றி
மா.பு.பாஸ்கரன்

