இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
இந்த மனுக்கள் இன்று பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தன.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரண, வழக்கை பரிசீலிப்பதற்கான விரைவான திகதியைக் கோரினார்.
அதன்படி, பிரதிவாதிகளுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு அறிவித்தது.
பின்னர் மனுவை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக, பிரதமர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்ட 31 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
நாட்டின் பிரஜைகளுக்காக டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் இது தொடர்பாக இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இந்த அமைச்சரவை முடிவுகள் பொதுமக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ தெரியப்படுத்தாமல் எடுக்கப்பட்டதாகவும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

