ஜனாதிபதி அநுர தேர்தல்களுக்கு செலவிட்டு பொது சொத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்!

39 0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பதவி காலத்தில் தேர்தல்களுக்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். இதன் போது அவர் செலவிட்ட பணம், பாதுகாப்பு செலவுகள் அனைத்தையும் பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கருத முடியும். அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு முறை கைது செய்தால், அநுரவை பத்து முறை கைது செய்ய முடியும் என முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கோட்டை – நீதவான் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அராஜக பாதையை நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளாக நாட்டில் காணப்பட்ட ஜனநாயக சுதந்திரமும் பல கட்சி ஆட்சி முறைமையும் இல்லாதொழிக்கப்பட்டு தனிகட்சி ஆட்சியை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.

இது நிர்வாக பிரச்சினையாகும். அவ்வாறிருக்கையில் இதில் புலனாய்வுத்துறை தலையிட்டு இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக அச்சுறுத்தவே முயற்சிக்கின்றனர்.

ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு நாம் அஞ்சப் போவதில்லை. இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்த்த ஜனநாயக சுதந்திரம் இங்கு கிடைக்கப் போவதில்லை.

எனவே அந்த மக்களையும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறில்லை எனில் எதிர்காலத்தில் நாட்டு பிரஜைகளுக்கு சுதந்திரமாக நடமாடக் கூடிய சூழல் காணப்படாது. பொது சொத்துக்கள் குறித்த சட்டம் ஜே.ஆர்.ஜயவர்தனவால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அந்த சட்டத்தின் கீழ் முதலில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட வேண்டியது பெலவத்த குழுவினராவர். இன்று நாட்டின் மொத்த கடன் சுமையில் 5 மடக்கு அழிவு அவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டது.

சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பேரழிவை ஏற்படுத்திய அவர்கள் முதலில் கைது செய்யப்பட வேண்டும். ஜனநாயகத்துக்காகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். கள்வர்களை கைது செய்வதற்கு அஞ்சி நாம் ஒன்றிணைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

ஆனால் அவ்வாறல்ல. கள்வர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த அரசாங்கத்துக்கு அதற்கான தகுதி இல்லை. இவர்களால் அதை செய்யவும் முடியாது. இவர்களால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு எதிராக 1994களில் ரணில் விக்கிரமசிங்க போன்றோர் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் தான் இன்று இவர்கள் இவ்வாறு தலைதூக்கியிருக்கின்றனர். 1980களிலிருந்து வடக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் அழிவை ஏற்படுத்திய இவர்களுக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பதவி காலத்தில் தேர்தல்களுக்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். தேர்தல் பிரசாரம் என்பது அவரது தனிப்பட்ட விடயமாகும்.

தேர்தல் காலத்தில் அவரால் தேர்தலுக்கான செலவிடப்பட்ட பணம், பாதுகாப்பு செலவுகள் அனைத்தும் பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமையாகும்.

அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க ஒரு முறை கைது செய்யப்படுவாரானால், அநுரகுமார திஸாநாயக்கவை 10 முறை கைது செய்ய முடியும் என்றார்.