நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

34 0

நீதித்துறை செயற்பாடுகளில் தலையீடுவது அரசியலமைப்பின் 111 (சி) (1) மற்றும் (2) ஆகிய ஏற்பாடுகளின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும்.ஆகவே நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிடுபவர்களுக்கு எதிராக இச்சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்புக்கு உட்படுத்துவதுடன் சட்டத்தின் சீரான செயன்முறையை அச்சுறுத்தும் அத்துடன் நீதி நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைவடையச் செய்யும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்படுவார் அவருக்கு பிணை வழங்கப்படமாட்டாது என்று யூடியூபர் ஒருவர் முன்கூட்டியதாக பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.இந்த கருத்து சமூக மட்டத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியதுடன், நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு நீதித்துறையின் செயற்பாடுகளில் வெளியால் தலையிடுவது தண்டனைக்குரிய குற்றம், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடு;க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சமூக ஊடகப் பதிவுகள்,அறிக்கைகள் மற்றும் விமர்சனங்கள் அல்லது யூடிபர்கள் ஆகியோரால் வழக்கு விசாரணையின் கணிப்புகள் என்று கூறப்படும் வெளிப்புற அச்சுறுத்தல்கள் அல்லது குறுக்கீடுகளில் இருந்து நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்புக்கு உட்படுத்துவதுடன் சட்டத்தின் சீரான செயன்முறையை அச்சுறுத்தும் அத்துடன் நீதி நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைவடையச் செய்யும்.

நீதித்துறை செயற்பாடுகளில் தலையீடுவது அரசியலமைப்பின் 111 (சி) (1) மற்றும் (2) ஆகிய ஏற்பாடுகளின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும்.ஆகவே நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிடுபவர்களுக்கு எதிராக இச்சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுக்க முடியும்.

சமூக ஊடகங்களில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு தொடர்பில் அண்மைகாலமாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியுள்ளோம்.இவ்விரு நிறுவனங்களும் சுயாதீன நிறுவனங்களாகும்.

நீதிச்சேவை ஆணைக்குழுவானது பிரதம நீதியரசர் உட்பட இரண்டு நீதியரசர்களை உள்ளடக்கியுள்ளது.நீதிபதிகளின் இடமாற்றம், நீதித்துறை அதிகாரிகளின் பதவி உயரவு,இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் பணநீக்கம் ஆகியன நீதிச்சேவை ஆணைக்குழுவின் விடயதானத்துக்குள் உட்பட்டதாகும்.சட்ட அமுலாக்க தரப்பினர் மற்றும் பொறுப்பான தரப்பினர்கள் சட்டத்தின் ஆட்சிக்கமைய செயற்படுவது அவசியமாகும்.