காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : 5 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழப்பு

45 0

காசாவில் உள்ள வைத்தியசாலையின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் வைத்தியசாலை மீது திங்கட்கிழமை (25) இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 ஊடகவியலாளர்கள் மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு பணியாளர் அடங்குவதாக சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் தெரிவித்தார்.

இஸ்ரேல் முதலில் ஆளில்லா குண்டுவீச்சு விமானத் தாக்குதல் நடத்தியதாகவும், காயமடைந்தவர்கள் வெளியேற்றப்படும் போது மற்றுமொரு வான்வழித் தாக்குதலை நடத்தியதாகவும் பஸ்ஸல் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேலிய இராணுவம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் வேண்டுமென்றே செய்தியாளர்களையோ, அப்பாவி பொதுமக்களையோ குறிவைக்கவில்லை என்றும், இச்சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ளது.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளரான ஹுஸாம் அல்-மஸ்ரி, இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் புகைப்படப்பிடிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான முகமது சலாமா இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வந்த மரியம் டக்கா என்பவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

மோஸ் அபு தாஹா மற்றும் அஹமத் அபு அஜிஸ் ஆகிய இரு ஊடகவியலாளர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை (25) மாலை, கான் யூனிஸின் அல்-மவாசி பகுதியில் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் ஆறாவது பத்திரிகையாளரான ஹசன் தூஹன் கொல்லப்பட்டதாகவும் பலஸ்தீன பத்திரிகையாளர் சங்கம் மற்றும் நாசர் வைத்தயிசாலை தெரிவித்துள்ளன.

ஊடக கண்காணிப்பு அமைப்புகளின்படி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் இந்த இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை சுமார் 200 ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது பத்திரிகையாளர்களுக்கான மிக ஆபத்தான போர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தத் தாக்குதல் ஐக்கிய நாடுகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளால் கண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.